வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-சுற்றுச்சூழல் அனுமதியின்றி, மணல் எடுத்து விற்பனை செய்த, கர்நாடக நீர்பாசன துறைக்கு, 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
அனுமதி
'கர்நாடகாவின் தெற்கு பகுதியில், பல்குனி ஆற்றின் குறுக்கே உள்ள அதியபாடி அணை, நேத்ராவதி ஆற்றின் குறுக்கே உள்ள ஷம்புரு அணையில் மணல் எடுக்க, கர்நாடக மாநில கனிம வள நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
'வணிக ரீதியாக மணலை எடுத்து விற்க, சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை.
'விதிமீறலில் ஈடுபட்ட அரசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, சர்வபோம் பாகலி என்பவர், தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
வணிக நோக்கத்திற்காக மணல் எடுக்கப்படுவதால், அணைகளில் துார்வார சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம். முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பே, அதியபாடி, ஷம்புரு அணைகளில், வண்டல் மண் எடுப்பதை, கர்நாடகமாநில கனிமவள நிறுவனம் தொடர முடியும்.
அபராத தொகை
வண்டல் மண்ணில் இருந்து மணலை பிரித்தெடுத்து, விற்பனை செய்வது சட்ட விரோதமானது. எனவே, கர்நாடக நீர்ப்பாசனத் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, 50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, ஆற்றுப் பகுதிகளில் மாசுபாட்டை குறைக்கும் திட்டங்களுக்காக, அபராத தொகையை பயன்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் அனுமதியின்றி, வணிக நோக்கத்திற்காக மணல் எடுக்கக் கூடாது என, பசுமை தீர்ப்பாயம் பலமுறை உத்தரவிட்டும், மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றுவதில்லை.
![]()
|
எனவே, விதிமுறைகளை கவனமாக பின்பற்றுமாறு, கலெக்டர்களுக்கு, கர்நாடக அரசின் தலைமை செயலர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவின் நாகலாபுரத்தில் இருந்து, தமிழகத்தில் பாயும் ஆரணியாற்றில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக மணல் எடுப்பதாக, நாகலாபுரத்தைச் சேர்ந்த ஹேமகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், 'சுற்றுச்சூழல் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் எடுத்த நிறுவனங்கள், இடைக்கால சுற்றுச்சூழல் இழப்பீடாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, மூன்று மாதங்களுக்குள், 18 கோடி ரூபாய் வழங்க வேண்டும். 'ஆரணியாற்றில் சுற்றுச்சூழலை மீட்டெடுக்க, இந்த தொகையை பயன்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.