கூடலுார்-முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு தலைவர் விஜய்சரண் தலைமையிலான குழு நாளை ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான கண்காணிப்புக் குழு உள்ளது.
இக்குழு அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இக்குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் டி.கே.ஜோஸ், நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு 2022 மே 9ல் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தியது. இந்நிலையில் நாளை (மார்ச் 27) இக்குழு அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறது.
எதிர்பார்ப்பு
அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய தளவாடப் பொருட்கள் கொண்டு வர வல்லக்கடவிலிருந்து அணைக்கு வரும் வனப்பாதையை சீரமைக்க வேண்டும். அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் 13 மரங்களை அகற்றி பலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தளவாடப்பொருட்களைக் கொண்டு செல்ல எவ்வித தடையும் கேரள வனத்துறை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தும் தொடர்ந்து கேரள வனத்துறை செய்துவரும் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆய்வின்போது தமிழக அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர்.