நாகர்கோவில் -கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் துாக்கத்திருவிழா மார்ச் 16 கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.
குழந்தை பிறக்க, ஆரோக்யமாக வாழ கோயிலில் தேவியிடம் பெற்றோர் வேண்டுகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1352 குழந்தைகள் பதிவு செய்திருந்தனர்.
இரண்டு சக்கரம் கொண்ட தேரில் 41 அடி உயரத்தில் இரண்டு துாக்க மரம் பொருத்தப்பட்டு அதில் 4 துாக்க வில்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வில்களில் நான்கு விரதமிருந்த துாக்ககாரர்களின் இடுப்பை இணைத்து துணிகளால் கட்டிய பின்னர் நேர்ச்சை குழந்தைகளை அவர்கள் கையில் தாங்கி பிடித்ததும் துாக்க மரம் விண்ணை நோக்கி எழும்பும்.
இந்த தேர் கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் குழந்தைகள் இறக்கப்பட்டு கோயில் நடையில் வைத்து புனித நீர் தெளிக்கும் போது துாக்க நேர்ச்சை நிறைவு பெறும்.
நேற்று துவங்கிய இந்த துாக்க நேர்ச்சை இன்று(மார்ச் 26) நிறைவு பெறுகிறது.