வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அவதுாறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் என அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதே ராகுல் எம்.பி. பதவி இழப்புக்கு காரணமாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் பதவி பறிப்பில் இருந்து தப்பி இருப்பார்.
![]()
|
திருடர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பெயரை ஒப்பிட்டு பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பர்னேஷ் மோடி அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு படி எம்.பி. பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (3)ன்படி எம்.பி. - எம்.எல்.ஏ. பதவி வகிப்பவர்கள் எந்த குற்றமும் புரிந்து அதற்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் அந்த பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுவர்.
அதே நேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8(1)ல் பல்வேறு குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த குற்றங்களுக்காக என்ன தண்டனை விதிக்கப்பட்டாலும் தகுதி இழப்பு வரும். சில குற்றங்களுக்கு அபராதம் விதித்தாலுமே தகுதி இழப்பு வரும்.
அவதுாறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது சிறையும் அபராதமும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் என்பது அதிகபட்சமானது. எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிப்பது என்பது நீதிபதியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
இரண்டு ஆண்டுகள் என தண்டனை விதிக்கப்பட்டதால் தான் சட்டப்பிரிவு 8(3) உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக விதிக்கப்பட்டிருந்தால் தகுதி இழப்பு வந்திருக்காது.
தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரை இன்னும் எம்.பி. பதவி காலியானதாக அறிவிக்கவில்லை; இடைத்தேர்தலும் அறிவிக்கவில்லை. அவ்வாறு இடைத்தேர்தல் அறிவிக்கும்பட்சத்தில் சூரத் நீதிமன்ற உத்தரவுக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கும் தடை விதிக்க கோரி ராகுல் தரப்பில் முறையிடலாம்.
![]()
|
லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தகுதி இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முகமது பைசல் மேல்முறையீடு செய்தார். குற்றவாளி என்ற உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்தது.
இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறும்போது ''எம்.பி. பதவியை ராகுல் இழந்தது இழந்தது தான்; தடை உத்தரவு பெற்றாலும் வெற்றி பெற்றாலும் இழந்த எம்.பி. பதவியை மீண்டும் பெற முடியாது. மேல்முறையீடு செய்து சூரத் நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெற்றாலோ ரத்து ஆனாலோ தேர்தலில் போட்டியிடும் தகுதியை ராகுல் பெறுவார்'' என்றார்.