சென்னை,-சென்னையில் இரண்டு நாட்கள் நடந்த, 'ஜி -20' கூட்டமைப்பின், இரண்டாவது நிதி கட்டமைப்பு பணிக் குழு கூட்டம் நேற்று நிறைவு பெற்றது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட உலகின் 20 முக்கிய நாடுகள் கொண்ட, 'ஜி -20' கூட்டமைப்புக்கு, 2023-ம் ஆண்டில் இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ஜி-20 உச்சி மாநாடு, இந்தியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, ஜி- 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும், பல்வேறு துறைகளின் பணிக் குழு கூட்டங்கள், நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 31 முதல் மூன்று நாட்களுக்கு, சென்னையில் கல்வி பணிக் குழு கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, நிதி கட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டம், நேற்று நிறைவு பெற்றது.
இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பிரிட்டன் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில், ஜி -20 உறுப்பு நாடுகள், இந்திய மேலாண்மை நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, இத்தாலி வங்கி, உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை சேர்ந்த, 87 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக, பத்திரிகை தகவல் துறையான பி.ஐ.பி., நேற்று வெளியிட்ட செய்தி:
காலநிலை மாற்றம், பணவீக்கம், உணவு, எரிசக்தி பொருட்களின் விலை உயர்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றின், பொருளாதார தாக்கங்கள் குறித்து இரண்டு நாட்களும் விரிவான, ஆழமான விவாதங்கள் நடந்தன.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து, வலுவான, நிலையான, பொருளாதார வளர்ச்சியை அடைய, ஜி-20 உறுப்பு நாடுகளுக்கு இடையே, கொள்கை ரீதியான ஒத்துழைப்பு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் விவாதங்கள் நடந்தன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் சில வங்கிகள் மூடல் உள்ளிட்ட, உலக அளவிலான நெருக்கடிகள்; நாடுகள் எதிர்கொள்ளும் கடினமான வர்த்தக பரிமாற்றங்கள்; வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்; உள்நாட்டு சேமிப்பை உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
சூரியசக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது பற்றிய குழு விவாதங்களும் நடந்தன.
சென்னை ஐ.ஐ.டி., சென்னை பொருளாதார பள்ளி மாணவர்களுடன், இந்திய மற்றும் உலக பொருளாதாரம் குறித்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கலந்துரையாடினார்.
கூட்டத்திற்கு வந்திருந்த பிரதிநிதிகளுடன், 'இரவு உணவுடன் உரையாடல்' என்ற தலைப்பில், தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து பேசப்பட்டது. சென்னையில் சில முக்கியமான இடங்களையும் பிரதிநிதிகள் சுற்றிப் பார்த்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.