வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-''சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவதால், சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது,'' என, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசினார்.
![]()
|
சென்னை காவல் துறை சார்பில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற, நான்கு குறும்பட இயக்குனர்களுக்கு, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
போதை பொருட்கள் கடத்தலை தடுக்க, சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், போதைக்கு எதிரான கருத்துகளை, குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்தோடு, சென்னை காவல் துறையால் தயாரிக்கப்பட்ட 'காமிக் தொடர்' புத்தகம் வெளியிடப்பட்டது.
பின், அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைக்கு, மாணவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு
மாணவர்கள், பகுத்தறிவை வளர்த்து கொள்ள வேண்டும். 'வாட்ஸ் ஆப்'பில் வரும் தவறான செய்திகளை, மாணவர்கள் நம்பி விட வேண்டாம்.
வதந்திகளை நம்பி, மற்றவர்களுக்கு பரப்புவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. உண்மையான செய்திகளை விட, வதந்திகள் எளிதில் மக்களிடம் சென்று சேர்ந்து விடுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பேசியதாவது:
போதை பொருட்கள் குறித்து ஆவண குறும்படம் போட்டி நடத்தி, வெற்றி பெறும் குறும்படங்களை பள்ளி, கல்லுாரிகளில் திரையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
நடவடிக்கை
இந்த போட்டிக்கு, 300க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறந்த நான்கு குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இதைத் தொடர்ந்து, போதைப் பொருட்களை ஒழிக்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()
|
முதல்வர் பாராட்டு
போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படத்தை, சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ளனர். இதை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:
'போதைப்பொருட்கள் ஒழிப்பில், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பிரசாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்' என, கூறி இருந்தேன்.
இத்தகைய குறும்படங்களால், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். பாராட்டுக்கள். போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்ப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது