வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: 'தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் கனகசபாபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 2024 மார்ச்சில் மாநில அரசின் கடன், 7.26 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளில் மட்டும் 1.55 லட்சம் கோடி கடன் அதிகரித்துள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 2.96 லட்சம் அளவு இருந்த கடன் சுமை தற்போது, 3.25 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் வருவாயின் பெரும்பகுதி மது விற்பனையையே நம்பியுள்ளது. மாநில அரசின் வருவாயில் 30 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருகிறது. மது வருவாயை ஆண்டுதோறும் அதிகரித்து அரசை நடத்துவது ஆபத்தானது.
குஜராத்தில், மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு, பா.ஜ., அரசு வருவாய் பற்றாக்குறை இல்லாத ஆட்சி நடத்துகிறது. எனவே, மது விற்பனையைக் குறைத்து, மற்ற துறைகள் மூலம் ஆக்கபூர்வமான வகையில் வருவாயைப் பெருக்க, அரசு திட்டமிட வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், மாதமொரு முறை மின் கட்டண கணக்கெடுப்பு, அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த உத்தரவாதங்கள், விவசாயிகளுக்கு நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை.
அனைத்துக் குடும்பத் தலைவிக்கும் மாதம் 1,000 ரூபாய் என அறிவித்து விட்டு, தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் என ஏமாற்றுகிறது. குறிப்பிட்ட கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் வெறும் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை என்பது விவசாயிகளை வஞ்சிப்பதாகும். மாநில அரசின் இந்த நிதி நிலை அறிக்கை பெருமளவு ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.