வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 டாக்டர் பணியிடங்களுக்கான தேர்வு, ஏப்., 25ம் தேதி நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் தின விழா, சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 'இன்புளுயன்சா' வைரஸ், ஒரு மாதத்துக்கு மேலாக ஏற்பட்டிருக்கிறது. 'எச்3 என்2' என்ற வைரஸ் இந்தியா முழுதும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களுக்கும் வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் வாயிலாக, காய்ச்சல் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
இன்புளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி, சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக வழங்க, அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
![]()
|
கடந்த நிதிநிலை அறிக்கையின் போது, 4,308 டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியிடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில், 1,021 டாக்டர்கள் பணியிடங்கள் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ள தால், காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணி யிடங்களுக்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்களுக்கு வரும் ஏப்., 25ம் தேதி தேர்வு நடத்தப்படும்.
மேலும், 986 மருந்தாளுனர்கள் பணியிடங்களுக்கான தேர்வு, ஏப்., 26, 27ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த இரண்டு தேர்வுகளும் முடிந்த பின், மே மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.