வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், ஆளுங்கட்சியினர் தலையீடு நாளுக்கு நாள் அதிகரிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல், விவசாயிகளிடம் கூடுதலாக பணம் வசூலிப்போர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த இரு ஆண்டுகளாக இயல்பான மழையளவைக் காட்டிலும், கூடுதலாக மழை பெய்ததால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகள் இன்றைக்கும் நிரம்பி காணப்படுகின்றன.
இதன் காரணமாக, மாவட்டத்தின் வேளாண் பரப்பு 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்தாண்டு சொர்ணவாரி மற்றும் சம்பா ஆகிய பருவத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 ஆயிரத்து, 495 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நவரை பருவத்தில், மாவட்டம் முழுதும் ஐந்து ஒன்றியங்களில், 62 ஆயிரத்து, 615 ஏக்கர் பரப்பளவில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் அறுவடை தற்போது துவங்கியுள்ளது.
![]()
|
அறுவடை செய்யும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முழுதுமாக கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மாவட்டம் முழுதும், ஐந்து ஒன்றியங்களிலும், 123 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 53 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைகிறது.
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் முன்பாகவே, அந்தந்த பகுதி ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கடந்த ஆண்டை போல், இந்தாண்டும் நெல் கொள்முதல் நிலையங்களை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் மாகரல் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை, உத்திரமேரூர் தி.மு.க.,-- எம்.எல்.ஏ.,வும், தெற்கு மாவட்ட செயலரான சுந்தர் திறந்து வைத்தார். ஆனால், மாகரல் ஊராட்சியின் அ.தி.மு.க., தலைவருக்கு தகவல் தெரிவிக்க வில்லை என்ற புகார் எழுந்தது. ஊராட்சி தலைவர் எதிர்க்கட்சியாக இருந்தால், நெல் கொள்முதல் நிலையம் திறப்பது கூட தெரிவிக்க மறுக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினர் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது :
விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும், 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு விவசாயிகளிடம் இருந்து, 50 ரூபாய் வரை கடந்த ஆண்டு வசூல் செய்தனர். இதனால் பல இடங்களில் தகராறு ஏற்பட்டது. நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் பகுதிகளில் உள்ள தி.மு.க., பிரமுகர்கள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விடுவார்கள். அவர்கள் முன்னிலையில் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டது.
ஒரு விவசாயி, 100 மூட்டை நெல் நுகர் பொருள் வாணிபக் கழகத்திடம் கொடுப்பதற்கு, 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. எதற்கு பணம் வாங்குகிறீர்கள் என கேட்டால், 'வேலை செய்யும் கூலியாட்களுக்கு சம்பளம், லாரியில் ஏற்றுவதற்கு கூலி கொடுக்கணும்' என, பல்வேறு காரணங்கள் கூறினர். இதனால் விவசாயிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல இடங்களில் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது 50க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் திறக்கப்பட உள்ளன. அதற்குள் அந்தந்த இடங்களில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், 'நாங்கள்தான் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்துவோம்' என, கூறி வருகின்றனர்.
இந்தாண்டு, பணம் வசூலிக்கப்படாததை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பணம் கேட்போர் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தரப்பில் கூறினர்.