அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அறிக்கை:
பட்ஜெட்டில் பத்திரப்பதிவு கட்டணம், 4 சதவீதத்தில் இருந்து, மக்கள் பயனடைய, 2 சதவீதமாக குறைத்துள்ளோம் என்கின்றனர். நில வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் உயர்த்தி உள்ளனர். உதாரணத்துக்கு நேற்று வரை, 666 ரூபாயாக இருந்த, ஒரு சதுர அடியின் வழிகாட்டி மதிப்பு, தற்போது, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது பதிவுக் கட்டணம் எந்த மாற்றமும் இல்லாமல், 7 சதவீதமாக தொடர்கிறது என்று தானே பொருள் கொள்ள வேண்டும்.

அதுவும் சரிதான்... ஆனா, இதை நீங்க நிதி அமைச்சர் தியாகராஜனிடம் கேட்டா, வழிகாட்டி மதிப்பு வேற; பதிவுக் கட்டணம் வேறன்னு யாருக்குமே விளங்காத மாதிரி புள்ளி விபரங்களை புட்டு வச்சு, புல்லரிக்க வச்சிடுவாரே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
2013ல், காங்., ஆட்சியில், தண்டனை குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த சட்டத்தை நீக்கும் சட்ட திருத்த மசோதாவின் நகலை, ராகுல் கிழித்து போட்டு நாடகமாடியதும், அதனால், அந்த மசோதா சட்டமாகாமல் போனதும் ஞாபகம் உள்ளதா? அந்த நாடகத்தை அன்று அரங்கேற்றாமல் சட்டமாக்கி இருந்தால், இன்று ராகுல் பதவி இழந்திருக்க மாட்டார்.
வாஸ்தவம் தான்... பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின்மூத்த தலைவர்கள் மனம் நோகும்படி, அன்று மசோதாவை கிழித்து எறிந்த ராகுல், இன்று அதே சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு நிற்கிறார்... இதைத்தான், 'முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்' என்பரோ?
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
பார்லிமென்டில் ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை, மத்திய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை. மீண்டும் அவரை பார்லிமென்ட்டுக்குள் அனுமதித்தால், தங்களதுஅரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே, ராகுலை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை என்பது, ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து, இந்திய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
தேசிய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள, முதல்வர் ஸ்டாலின் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிறாரோ?
அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன் பேட்டி:
ராகுலை சிறையில் அடைக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் நோக்கமாக உள்ளது. ராகுல் சிறைக்கு சென்றால், காங்கிரசார் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவர். நாட்டில் உள்ள அனைத்து சிறை கதவுகளையும் திறந்து வைக்க வேண்டியநிலை ஏற்படும். சிறையிலிருந்து அரசியல் செய்ய, காங்கிரசார் தயாராக உள்ளனர்.
ராகுலுக்கு இரண்டு ஆண்டு தண்டனை குடுத்தப்ப, தமிழக தலைவர் அழகிரி நடத்திய ரயில் மறியல் போராட்டத்துல, எண்ணி நாலே பேர் தான் இருந்தாங்க... நீங்களாவது, சிறைகளை நிரப்புறதாவது... சும்மா காமெடி பண்ணாதீங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை, இரு படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. வங்கக் கடலில், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க, அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.
அதை மதிக்காமல் தமிழகமீனவர்களை கைது செய்வது, இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால்; அதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு, மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்.

நம் காலடியில் இருக்கும் ஒரு குட்டி நாடு, நமக்கு சவால் விடுவதை மத்திய அரசு சீரியசாக எடுத்து கொள்ள வேண்டும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
'முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், பன்னீர்செல்வம் பேசுவதற்கு வாய்ப்பு அளித்தேன்' என, சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கம் ஏற்புடையது அல்ல. ஒரே கட்சியில் மூன்று, நான்கு முன்னாள் முதல்வர்கள் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்க முடியுமா?
அது, சபாநாயகரின் அதிகாரவரம்புக்கு உட்பட்ட விஷயமாச்சே... அ.தி.மு.க., ஆட்சியில சபாநாயகரா இருந்த இவருக்கு இது தெரியாதா?
இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் பேட்டி:
கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு வாடகை வசூல் செய்வதை விடுத்து, அவர்கள் பெயரில்பட்டா வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பவே, பலரும் வாடகையை ஏகத்துக்கும் இழுத்தடிக்கிறாங்க... இதுல, கோவில் நிலங்களை எல்லாருக்கும் பட்டா போட்டு குடுத்துட்டா, கோவில்களின் நிர்வாகத்துக்கு பணம் எங்கிருந்து வரும்?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல்மொழியாக, தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, மாநில மொழிகளுக்கு எதிரான முடிவாகும். உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தடையாக இல்லை.
எனவே, தமிழகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும், மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் சந்தித்து, இந்த கோரிக்கையை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

'தமிழகம் மீதும், தமிழ் மீதும், பிரதமர் மோடி மிகுந்த பற்று, பாசத்துடன் இருக்கிறார்' என, தமிழக பா.ஜ.,வினர் அடிக்கடி பெருமை அடிச்சுக்கிறாங்களே... அவங்க முன்வந்து இந்தப் பிரச்னையை தீர்க்கலாமே!