சேலம்: தமிழகத்தில், 146 பயிற்சி மையங்கள் மூலம், 13 லட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் பேசினார்.
மத்திய அரசு, குஜராத் அரசு சார்பில், சவுராஷ்டிரா தமிழ் சங்கம நிகழ்ச்சி அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சேலத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கம நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் மத்திய ரயில்வே, ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் பேசியதாவது:
கலைத்திறன் மிக்கவர்களை ஊக்கப்படுத்த, 'விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். சவுராஷ்டிரா தமிழ் சங்கம நிகழ்ச்சி மூலம் தமிழகம் - -குஜராத் மாநில மக்களிடையே கலாசார இணைப்பு பலப்படும். கலை, கலாசாரம், ஜவுளி, வர்த்தகம், கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு மாநில மக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
'வந்தே பாரத்' திட்டத்தில், 75 ரயில்கள், பல்வேறு நகரங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 75 ரயில்வே ஸ்டேஷன்கள், 'அம்ரித்' திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், சேலம் ஜங்ஷனும் உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் பாரபட்சமின்றி, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில், 146 பயிற்சி மையங்கள் மூலம், 13 லட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கைத்தறியை மேம்படுத்த, 63 பயனாளிகளுக்கு, 45 லட்சம் ரூபாய் மானியம்; தரம் உயர்த்த, 1.12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்புடன் கூடிய அடையாள அட்டை, 52 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் குஜராத் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, குஜராத் காந்தி நகர் கலெக்டர் பிரவீனா, சவுராஷ்டிரா தமிழ் சங்கம ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் நிருபர்களிடம் கூறியதாவது: விருதுநகரில் தொடங்கப்படவுள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவுக்கு, 50 சதவீத நிதி மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும். சுற்றுச்சூழல் பிரச்னைக்கு இடமில்லாதபடி பூங்கா அமைய உள்ளது. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடங்கப்படுவது குறித்து, எந்த முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.