புதுக்கோட்டை: மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதில், பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது,'' என்று தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் சங்க மாநில தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அச்சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
மின் ஊழியர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால், வரும், 28ம் தேதி திட்டமிட்டபடி மின் ஊழியர்களின் போராட்டம் நடக்கும். தமிழக அரசும், மின்வாரிய அமைச்சரும், மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்பாமல், அந்த பணியையும் சேர்த்து, தற்போதுள்ள பணியாளர்களே செய்கின்றனர்.
ஆகையால், உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க குளறுபடிகள் உள்ளன. ஒரு மின் இணைப்புக்கு, ஒரு ஆதார் எண் தான் இருக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டதால், வீட்டில் குடியிருப்பவர்களின் ஆதார் எண்களை, மின் இணைப்புடன் இணைக்க வீட்டின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் குளறுபடிகள், பிரச்னைகள் ஏற்படுகின்றன. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.