மயிலாடுதுறை: அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் நிருபர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம. ஆனால் அவர்கள் கழக விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர் முன்மொழிந்து, 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம்.
அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகாலம் முழுமையாக தமிழகத்தை வழிநடத்தி ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்ற நிலையை அம்மாவும், புரட்சித்தலைவரும் உருவாக்கினார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். கழகத்தின் சட்ட விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். பழைய உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு, கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.