மூணாறு: உயர்நீதிமன்றத்தில் விபரங்கள் தெரிவித்து அரிசி கொம்பன் என்ற காட்டுயானையை பிடிக்கும் பணி தொடரும்,'' என, கோட்டயத்தில் கேரள வனத்துறை அமைச்சர் சசிந்தரன் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை பகுதிகளில் தாக்குதல் சுபாவத்துடன் திரியும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து கோடநாடு யானைகள் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்ல மார்ச் 29 வரை தடை விதித்து கேரளா உயர் நீதிமன்றம் மார்ச் 23ல் உத்தரவிட்டது.
இன்று (மார்ச் 26) யானையை பிடிக்க திட்டமிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவு வனத்துறை அதிகாரிகள், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனை கூட்டம் கோட்டயத்தில் கேரள வனத்துறை அமைச்சர் சசிந்திரன் தலைமையில் நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், வனத்துறை உயர் அதிகாரி பென்னிச்சன்தாமஸ், உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் அமைச்சர் சசிந்திரன் கூறியதாவது: காட்டு யானையை பிடிப்பது தொடர்பாக அட்வகேட் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை நடத்தியது குறித்து உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் நடவடிக்கையை மட்டும் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் பிற பணிகள் நடக்கும், என்றார்.
யானையை பிடிக்க ஏற்கனவே இரு கும்கி யானைகள் வயநாடு முத்தங்கா யானைகள் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று குஞ்சு, சுரேந்திரன் ஆகிய கும்கி யானைகளும் சின்னக்கானல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.
ஊராட்சிகளில் எதிர்ப்பு
உயர்நீதிமன்றம் உத்தரவால் யானை பிடிக்க காலதாமதம் ஏற்பட்டதற்கு சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. பொது மக்கள் நேற்று முன்தினம் மாலை தீப்பந்தங்களை ஏந்தி கண்டன ஊர்வலம் நடத்தினர். பூப்பாறையிலும் கண்டன ஊர்வலம் நடந்தது.