தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே போலீஸ் ஸ்டேஷனில் தகராறில் ஈடுபட்ட பா.ஜ., பிரமுகர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுாரைச் சேர்ந்தவர் சந்தோஷ், 30, ராஜா, 37. மது போதையில் வாகனங்களை மறித்து இருவரும் தகராறில் ஈடுபட்டதால், தண்டராம்பட்டு போலீசார் கைது செய்தனர். அப்போது, பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட துணைத்தலைவர் தென்முடியனுாரைச் சேர்ந்த குபேந்திரன், 55, சாந்தி, நிஷாந்தி உட்பட, 10 பேர் தண்டராம்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, 'கைது செய்தவர்களை விடுவிக்காவிட்டால் கொன்று விடுவோம்' என, போலீசாரை மிரட்டினர். இது தொடர்பாக, 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், குபேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.