ஆரணி: ஆரணி அருகே, மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்காரரை, டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல் சீசமங்கலம் கமண்டல நாகநதி ஆற்றில், மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, ஆரணி டவுன் எஸ்.எஸ்.ஐ., தன்ராயன் தலைமையிலான போலீசார், 23ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு டிராக்டர் நிற்காமல் சென்றதால், போலீசார், 'பைக்'குகளில் விரட்டி சென்றனர். டிராக்டரை ஓட்டியவர் மோதியதில், எஸ்.எஸ்.ஐ., தன்ராயன் பைக், டிராக்டரில் சிக்கி, அரை கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டது. தன்ராயன் பைக்கிலிருந்து குதித்து தப்பினார்.
விசாரணையில், டிராக்டர் டிரைவர், ஆரணி அடுத்த நெசல் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி, 39, என்பதும், தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ரஜினியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.