வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: பா.ஜ.,வை எதிர்ப்பதற்கு மாநில கட்சிகளை தேசிய கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என, காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: ராகுலுக்காக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரசுக்கு பாராட்டுகள். ராகுலுக்காக சமாஜ்வாதி அனுதாபப்படுகிறதா என கேட்டால், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல்சாசனம் மீண்டும் புத்துயிர் பெறுமா இல்லையா என்றே கவலைப்படுகிறோம். மாறாக எந்த கட்சி குறித்தும் அனுதாபம் இல்லை.

பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என்றால், மாநில கட்சிகளுக்கு தேசிய கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தேசிய கட்சிகளுக்கு, எந்த மாநில கட்சிகள் இடையூறு செய்திருந்தாலும் அதனை மறக்க வேண்டும். மத்தியில் உள்ள அரசு தான் மாநில கட்சிகளை தொந்தரவு செய்கிறது.
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மாநில கட்சிகளை குறிவைத்து செயல்படுகின்றன. முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா, ஸ்டாலின், சந்திரசேகர ராவ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றை மத்தியில் உள்ள கட்சிகள் குறிவைத்து தாக்குகின்றன.
கூட்டணியை உருவாக்குவது எங்களது வேலையல்ல. ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமே எங்கள் பணி. வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 40ல் வெற்றி பெறுவதே எங்களது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.