கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் வரும் ஏப்ரல்1ம் தேதி முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளன.
கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு மார்ச் 6ம் தேதி முதல் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆறு கட்டட தொகுதிகளில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 54பேர் அமரும் வகையில் மினி ஏசி தியேட்டர், மெய்நிகர் காட்சி, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1ம் தேதி முதல் உள்ளுர் நபர்கள் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும், மாணவர்களுக்கு ஐந்து ரூபாயும், வெளிநாட்டினருக்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும், புகைப்படம் எடுக்க 30 ரூபாயும், வீடியோ படம் எடுக்க 50 ரூபாயும் கட்டணம் தொல்லியல் துறை மூலம் வசூலிக்கப்பட உள்ளது. இதுவரை மினி ஏ.சி., தியேட்டர், மெய்நிகர் காட்சி, விளையாட்டுகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஏப்ரல் முதல் அதற்கும் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. கூடுதலாக பாதுகாவலர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.