புதுடில்லி:லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சத்யாகிரகப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில், கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் பங்கேற்கவில்லை. தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு, மற்ற எதிர்க்கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது, காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த வழக்கில், காங்கிரசின் ராகுலுக்கு, குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் புதுடில்லியில் நேற்று, 'சங்கல்ப் சத்யாகிரகம்' எனப்படும் உறுதி ஏற்பு சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது.
மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் போராட்டம் நடத்த காங்கிரஸ் அனுமதி கேட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
யாரும் பங்கேற்கவில்லை
இதை மீறி, ராஜ்காட்டின் வெளியே மேடையமைத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் போராட்டம் நடந்தது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், தெலுங்கானா உட்பட பல மாநிலங்களிலும், காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
காங்கிரசின் இந்த போராட்டத்தில், அதன் கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. ராகுலின் தகுதியிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் அறிக்கை வெளியிட்டன.
தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ள திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
பார்லிமென்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அமளி ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில், நம் நாட்டில் ஜனநாயகம் நசுக்கப்படுவதாக ராகுல் பேசினார். இதற்கு மன்னிப்பு கேட்க, ஆளும் பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளும் எதிர் கோஷமிட்டன. அப்போது, காங்கிரசுடன் இணைந்து, பல எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
தேசிய அளவில் தங்கள் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் தலைமை விரும்புகிறது.
ஆனால், இதற்கு பல பிராந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், ராகுல் தகுதியிழப்பு விவகாரத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளை தங்கள் தலைமையில் ஒருங்கிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டது.
ஆனால், வெறும் அறிக்கையை மட்டும் வெளியிட்டு, மற்ற கட்சியினர், காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி விட்டனர். இது, காங்கிரஸ் தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிக்கு ஒத்துழைப்பு
சமாஜ்வாதி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி செயல்படுமா என்பது முக்கியம் அல்ல. நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது தான் முக்கியம். எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, அனுதாபம் தெரிவிக்கும் வகையிலோ சமாஜ்வாதி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.
பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தில், பிராந்திய கட்சிகளுக்கு ஆதரவாக தேசிய கட்சிகள் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
வரும் லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைப்பது எங்கள் வேலையல்ல. கூட்டணிக்கு ஒத்துழைப்பு அளிப்பது தான் எங்கள் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், தன் சுயவிபர குறிப்பை ராகுல் மாற்றியுள்ளார். தன் பெயருக்கு பின்னால், தகுதி நீக்கப்பட்ட எம்.பி., என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:நம் நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்தப் போராட்டங்களை நடத்துகின்றனர். இதற்கு சத்யாகிரகம் என்று பெயரிட்டு, மஹாத்மா காந்திக்கு இழுக்கை ஏற்படுத்திஉள்ளனர்.நாட்டின் விடுதலைக்காக மஹாத்மா காந்தி நடத்திய சத்யாகிரக போராட்டங்களை அவமதித்து உள்ளனர்.ஒரு தனி நபருக்காக, சட்டத்தை மீறிய நபருக்காக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவதுாறாக பேசியவருக்காக இந்தப் போராட்டம் நடத்துவது வெட்கக்கேடு.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லியில் நடந்த போராட்டத்தில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா பேசியதாவது: தேர்தல்களில் போட்டியிட முடியாத அளவுக்கு ராகுலுக்கு தடை விதித்துள்ளது, ஜனநாயகத்துக்கு எதிரானது. மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான அராஜக அரசுக்கு எதிராக, அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க, எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்.
என் சகோதரர் ராகுல், தியாகியின் மகன். அவரை துரோகி எனக் கூறி பா.ஜ.,வினர் அவமதித்தனர். பா.ஜ., தலைவர்கள் பலர், எங்கள் குடும்பத்தையும், எங்கள் தாயையும் பலமுறை அவமதித்து பேசியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு போடவில்லையே? ராகுலை சிறையில் தள்ளி ஒடுக்க நினைக்கின்றனர். அவர், அதற்கு பயப்பட மாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.