பெரியகுளம்:பெரியகுளம் கும்பக்கரை அருவியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய, 40 பேரை வனத்துறையினர் சமயோசிதமாக மீட்டனர்.
தேனி மாவட்டம், கொடைக்கானல் வனக்கோட்டம், தேவதானப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்டது கும்பக்கரை அருவி. வெயில் தாக்கத்தால் இம்மாதம் துவக்கத்தில் அருவியில் தண்ணீர் குறைந்திருந்தது.
அருவி நீர்ப்பிடிப்பில் கடந்த வாரம் முதல் பெய்யும் கோடை மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. விடுமுறை நாளான நேற்று காலை, 9:00 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.
மதியம், 3:00 மணி முதல் கன மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. சுற்றுலா பயணியர் இதையறியாமல் குளிப்பதில் ஆர்வமாக இருந்தனர். மதியம், 3:55 மணிக்கு அருவியில் காட்டாற்று வெள்ளம் துவங்கியது.
ரேஞ்சர் டேவிட்ராஜா தலைமையில் வனவர் பூவேந்திரன், வனக்காப்பாளர்கள் தமிழழகன், ஈஸ்வரன், சுற்றுலா காவலர்கள் விவேக், செந்தில் ஆகியோர் சமயோசிதமாக செயல்பட்டு பயணியரை அவசரமாக மேலே ஏற அறிவுறுத்தினர்.
இருப்பினும், 20க்கும் மேற்பட்ட பயணியர் அருவியில் வழக்கமான வலது பாதையில் கரை ஏறினர். சிலரை வனத்துறையினர் தண்ணீரில் இறங்கி துாக்கி விட்டனர்.
ஆனால், 20க்கும் மேற்பட்டோர் அருவி இடதுபுறம் கரை ஏறினர். அவர்களை அருவி மேற்புறம், 100 மீட்டர் துாரம் எம்.ஜி.ஆர்., பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர். மாலை, 4:15 மணிக்கு அனைவரும் கரையேற்றப்பட்டனர். அப்போது அருவியை மூழ்கி வெள்ளம் சென்றது.
இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை, கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.