இறை நினைவுடன் இருங்கள்
'இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்' என இறைவன் சொல்வதாக நபிகள் நாயகம் சொல்கிறார். இதில் 'அவனுடன் இருக்கிறேன்' என்பதற்கு அந்த அடியவனைத் தன் பாதுகாப்பில் இறைவன் வைக்கிறான் என்பது பொருள்.
இறைவனின் சிந்தனையுடன் இருப்பவனே உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாவான். அவனை மறந்தவன் பிணத்திற்கு ஒப்பாவான். மானக்கேடான, தீய செயல்களில் இருந்து மனிதனை தொழுகை விடுவிக்கிறது. கீழ்த்தரமான ஆசைகளைத் துாண்டும் சொல், செயல்களில் இருந்து விலக்கி காப்பாற்றுகிறது. தர்ம வழியில் வாழவும், செல்வத்தை நல்ல வழியில் செலவழிக்கவும் துாண்டுகிறது. கஞ்சத்தனத்தை விட்டு விலகி நிற்கச் செய்கிறது. இறை நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது.
அது குறித்து அலட்சியமாய் இருப்பது ஒருவனது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். இந்த மனித உடலின் வாழ்க்கை உணவைக் கொண்டே அமைந்துள்ளது. உணவு கிடைக்காவிட்டால் உடல் அழியும். அது போல 'இறைச்சிந்தனை' என்னும் உணவு கிடைக்காமல் போனால் உள்ளத்திற்கு மரணம் ஏற்பட்டு
விடும். எனவே நாம் எப்போதும் இறை நினைவுடன் வாழ வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:47 மணி