வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மனிதனால் தாங்க முடியாத விஷயங்கள் இருந்தாலும், அதில் முதலிடம் பெற்றிருப்பது, வலி தான். நம் அன்றாட வாழ்வில் வலி என்பது ஒரு பொதுவான பிரச்னையாக உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வரும் வலி மற்றும் வேதனை, பலர் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

உடம்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் தசைமற்றும் எலும்பு பகுதிகளில் வலி அவ்வப்போது வந்து வந்து போகிறது. ஆனால் அதற்குரிய காரணம் என்ன என்பது நமக்குத் தெரியாமல் உள்ளது.
வலியைப் போக்க வலி நிவாரணி மற்றும் அதிகமான மருத்துவ வழிமுறைகளை கடைப்பிடித்த பின்னும், வலி முழுவதுமாக கட்டுப்படவில்லை என்ற ஒரு நிலை சிலருக்கு இருக்கும்.
உடல் பிரச்னைகள்
பெரும்பாலோருக்கு இப்படிப்பட்ட வலி உண்டு. 'எனக்கு மட்டும் தான் இப்படி வலிக்கிறது' என்று, யாரும் எண்ண வேண்டியதில்லை.
நடைமுறையில் சாத்தியப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட, நல்ல சிகிச்சை வழிமுறைகள், இதற்கு உள்ளன. அத்தகைய சிகிச்சைகளில், வலியால் அவதிப்படும் நபர்களின் பங்களிப்பை பற்றிய கட்டுரை தான் இது.
நம் உடலின் ஏதேனும் ஒரு பகுதியில், எதற்காக வலிக்கிறது என்ற காரணம் அறிய முடியாத வலி, நரம்பு மண்டலத்தின் அதீத துாண்டலின் காரணமாக உண்டாவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, பழுதடைந்த தீ எச்சரிக்கை கருவி, தீ சூழ்ந்து இருப்பதாக தவறுவதாக எச்சரிக்கை விடுத்தால் எப்படி இருக்கும்... அது போல, நம் உடலில் ஒரு நிகழ்வு, மத்திய நரம்பு மண்டலத்தில், வலிக்கான காரணங்கள் எதுவும் இல்லாத போதும், வலி இருப்பதாக நமக்கு உணர்த்துகிறது.
இது ஆங்கிலத்தில், 'சென்ட்ரல் நெர்வஸ் சிஸ்டம் சென்சிட்டைசேஷன்' என்று சொல்லப்படுகிறது. இந்த வகையில், ஒருவருக்கு ஏற்கனவே உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தாலோ, வேறு வகையான உடல் பிரச்னைகள் அல்லது வியாதிகளின் விளைவாகவோ, நரம்பு மண்டலம் அதிகமாக துாண்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுகள்
ஆனால் ஏதேனும் ஒரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அவர் குணம் அடைந்த பின்னரும் அல்லது இயல்புநிலைக்கு திரும்பிய பின்னரும், நரம்பு மண்டலம் தொடர்ந்து அந்த துாண்டல் நிலையை பின்பற்றுவது தான், இத்தகைய நீண்ட நாட்கள் நீடிக்கும் நிலையான வலிகளுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இப்படி நீண்ட நாட்கள் நீடிக்கும் வலிக்கு, உடல் சார்ந்த நிகழ்வுகள் மட்டும் காரணமாக இருப்பதில்லை. மனதும் ஒரு காரணம். அந்த வலியை முன்னெடுக்கும் அம்சங்கள், மனம், எண்ணம் மற்றும் சமூகம் ஆகியவற்றை சார்ந்தே இருக்கிறது என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வலி என்பது உடலில் ஏற்படும் ஒருவித உணர்ச்சி மட்டுமல்ல; அது ஒரு உணர்வு சார்ந்த விஷயம் என்பதும், பல்வேறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த காரணங்கள் அனைத்தும், ஏற்றுக் கொள்ள கூடியதாகவே உள்ளன.

நம் உடலில் உள்ள திசுக்களில் எந்த வகையான சேதாரமும் இல்லாமல் இருக்கும் போதும் வலி ஏற்படுவது விசித்திரமாகவே இருக்கும். ஆனால் இது போன்ற வலிகள், ஆபத்தில்லாதவை என்பது ஆறுதலான ஒரு விஷயம்.
அதே சமயம் வலியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிப்பவர்கள், இவ்விதமான வலிகள் பற்றிய காரணங்கள் மற்றும் தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துச் சொல்வதில், சில சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.
விரைவில் நிவாரணம்
'பயோ சைக்கோ சோஷியல்' என்று அழைக்கப்படும் கருத்தியலின் படிக வலை, மனச்சோர்வு, துாக்கமின்மை, சோர்வு, வலி பற்றிய தவறான கருத்தாக்கம், வயது முதிர்வு, சமூக அழுத்தம், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பாலினம் போன்றவை, நாள் பட்ட வலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய பன்முகத்தன்மை கொண்ட காரணிகளாக அறியப்படுகின்றன.
இந்த வகையான நாள் பட்ட வலிகளை குணப்படுத்துவதில், வலி மருத்துவர், மயக்கவியல் நிபுணர், இயன்முறை சிகிச்சையாளர் மற்றும் மருத்துவ மனநல நிபுணர்கள் போன்ற பல நிபுணர்களின் பங்கு, அளப்பரியதாக இருக்கிறது.
இவர்களால் அளிக்கப்படும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகளுடன், சிகிச்சை பெறுபவரின் சுய மேலாண்மை மற்றும் வலி குறித்த அறிவியல் ஞானம் போன்றவை, நோயாளிகளின் பங்களிப்பாக இருக்கும் பட்சத்தில், இதற்கான நிவாரணமும் விரைந்து கிடைக்கும்.
நல்ல பணிச்சூழல், மேம்படுத்திய மனநிலை, சரியான மருந்து மேலாண்மை, கவன மாற்றம், நல்ல துாக்கம், சிறந்த பொழுதுபோக்கு, நிதானமான செயல்பாடுகள் மற்றும் சமூக ஈடுபாடு முதலிய அனைத்து சுய மேலாண்மை உத்திகளையும், சிகிச்சையாளர்களிடம் இருந்து பெற்று செயல்படும்போது, நாள் பட்ட வலிக்கு தீர்வு காண முடியும்.
விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்சர்வஜெனிக் பிசியோதெரபி கல்லுாரி, பி.பி.சவானி பல்கலைக் கழகம்சூரத், குஜராத் மாநிலம். 94264 39169 atramalingam@gmail.com