வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... .........
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'நான் தவறான எண்ணத்துடன், மோடியை திருடன் என்று கூறவில்லை என ராகுல் விளக்கம் அளித்த பிறகும், அவரை அவதுாறு பேச்சுக்காக தண்டித்துள்ளது, மிகவும் வருந்தத்தக்கது. எதிர்க்கட்சிகளை குறி வைத்து வந்த பா.ஜ., இப்போது ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்துள்ளது. இந்த அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்; இறுதியில் நீதியே வெல்லும்' என, எம்.பி., பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராகுலுக்காக வக்காலத்து வாங்கி, நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
![]()
|
அவதுாறு பேச்சுக்காக, ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடியின் மாமனோ, மச்சானோ அல்ல என்பதை, ஸ்டாலின் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய தண்டனை சட்டப்படி, அவதுாறு பேச்சுக்காக இரண்டாண்டு சிறை தண்டனையை ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இரண்டாண்டு தண்டனை பெற்ற யாரும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.பி., பதவியில் நீடிக்க முடியாது.
சட்டப்படியே ராகுல், தன் எம்.பி., பதவியை இழந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும், எதிர்க்கட்சித்தலைவர்கள், 'ஜனநாயகம் செத்து விட்டது; எதிர்க்கட்சிகளை அழிக்க பா.ஜ., முற்படுகிறது; பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்படுகிறார்' என ஒப்பாரி வைப்பதில், எந்தப் பிரயோஜனமும் இல்லை.
மேலும், ராகுல் மீது ஏழு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் எந்தெந்த வழக்குகளில், 'ஜாமின்' பெற்று வெளியே இருக்கிறார் என்பதையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்.
'தவறு என்பது தெரியாமல் செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தியாக வேண்டும்; தப்பு செய்தவன் வருந்தியாக வேண்டும்' என, 'பெற்றால் தான் பிள்ளையா' திரைப்படத்தில், எம்.ஜி.ஆர்., பாடிய பாடல், ராகுலுக்காக வக்காலத்து வாங்குவோருக்கு நல்ல அறிவுரையாகும்.
![]()
|
மோடி என்ற பெயருடையவர்கள்,மோசடி பேர்வழிகள், திருடர்கள் என்ற முடிவுக்கு வந்தால், காந்தி என்ற பெயருடையவர்கள் எல்லாம், புடம் போட்ட தங்கங்கள் ஆகி விடுவரா என்ன?
'தெரியாமல் கொலை செய்து விட்டேன்; என்னை மன்னித்து விடுதலை செய்து விடுங்கள்' என்று, எந்த கொலையாளியாவது நீதிமன்றத்தில் முறையிட்டால், அவரை நீதிபதி தண்டிக்காமல் விட்டு விடுவாரா... சட்டப்படி தண்டிக்கப்பட்ட ராகுலுக்காக வக்காலத்து வாங்கிப் பேசுவோர், நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுப்பதாக, நீதிபதியை இழிவுபடுத்துவதாகவே அர்த்தம்.