கொச்சி-கேரளாவின் கொச்சியில் உள்ள குப்பைக் கிடங்கில் பரவிய தீ, சமீபத்தில் முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், இங்கு மீண்டும் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சியில் உள்ள பிரம்மபுரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. கடந்த 2008ல் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள இந்த குப்பைக்கிடங்கில், நாள்தோறும் ஒரு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இங்கு, கடந்த 2ம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ, பல்வேறு பகுதிகளுக்கு பரவி 10 நாட்களுக்கு மேலாக இடைவிடாமல் தொடர்ந்து எரிந்தது. பல நாட்கள் போராட்டத்துக்குப் பின் தீ, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்த குப்பைக்கிடங்கில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு குவிக்கப்பட்டிருந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருவதால், பொதுமக்கள் கவலை அடைய வேண்டாம்' என எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் உமேஷ் கேட்டுக் கொண்டார்.
முன்பு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே மாசடைந்த நிலையில், 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கொச்சி மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.