வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக நிகழ்வுகள்
நிதி நிறுவனம் மோசடி: முற்றுகையிட்ட மக்கள்
சென்னை: சென்னை, முகப்பேரில், 'ஏ.ஆர்.மால்' எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வாரந்தோறும் வட்டியாக, 3,000 ரூபாய் தரப்படும் என, ஆசை காட்டப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு மாதமாக வட்டி ஏதும் தராமல், 30 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
![]()
|
இந்நிறுவனம் மீது ஏற்கனவே, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகேஷ்குமார், 27, என்பவர், சென்னை, அசோக் நகரில் உள்ள, பொருளாதர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், பணத்தை திரும்ப கேட்டு, 30க்கும் மேற்பட்டோர், அந்த நிதி நிறுவனம் அலுவலகத்தை, நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அப்பொழுது, 'பவுன்சர்'கள் எனும் பாதுகாவலர்களை வைத்து அவர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதன் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஜெயபிரகாஷ் ராபின் ஆரோன் என்பவர், முதலீட்டார்கள் தன்னை தாக்கியதாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து, நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கோவை:குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அருண், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சேரன்நகர் பகுதியில் கடந்த மாதம், 27 ம் தேதி, 1½ டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற கோவை வெள்ளாளப்பட்டியை சேர்ந்த பாபு, 47, என்பவரை கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கோவை, பொள்ளாச்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் பரிந்துரை செய்தனர்.
பாபுவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து சிறையில் உள்ள பாபுவிடம் அதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.ரேஷன் அரிசி கடத்தியவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.
கஞ்சா பதுக்கல்; இருவருக்கு சிறை
கோவை;செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செட்டிபாளையம் அம்பாள் நகர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோகுல், 22, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோகுல், 22 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 1,100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மது போதையில் பெண்களை துரத்திய போலீஸ்
அன்னுார்:கோவை அருகே மது போதையில் பெண்களை துரத்திய போலீஸ்காரரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், அன்னுார் அருகே சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 27. இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நரியம்பள்ளியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் ருத்திரியம்பாளையத்தைச் சேர்ந்த துளசி மணி, 28, விஜயலட்சுமி, 27 ஆகிய இருவரும் பணி முடிந்து, நேற்று முன்தினம் மாலை மொபட்டில் ருத்திரியம்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த வேல்முருகன் தனது யமஹா பைக்கில் பெண்களின் மொபட் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளார். இதை பார்த்த ஊர் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அன்னூர் போலீசார் சென்று வேல்முருகனை அழைத்து வந்து, அரசு மருத்துவமனையில் அவர் மது அருந்தி உள்ளாரா என்பதற்கான பரிசோதனை செய்தனர். பின்னர் அவரை விசாரித்து, எச்சரித்து விடுவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'போலீஸ்காரர் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.,க்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.
தொடர் விசாரணையில், வேல்முருகன் சில ஆண்டுகளுக்கு முன், அந்த இருவரில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து உள்ளார். ஆனால், அது தடைபட்டது என தெரியவந்தது.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் 'ஆட்டை'
திருநின்றவூர்: திருநின்றவூர், செல்வராஜ் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 54. கணவர் இறந்த நிலையில், வீட்டில் தனியாக வசிக்கிறார்.
கடந்த வாரம் 21ம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு, கொரட்டூரில் வசிக்கும் இவரது மகள் ஆர்த்தி, 30, வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, 4 சவரன் தங்க நகை, 10 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடு போனது தெரிந்தது.
இது குறித்த புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுனரை வெட்டிய 6 பேர் கைது
ஓட்டேரி: சென்னை, வியாசர்பாடி, தாமோதரன் நகரைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 34; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் மாலை, ஜீவா ரயில் நிலையம் அருகே, சில பயணியரை ஏற்ற ஆட்டோவை நிறுத்தினார். அப்போது, அங்குள்ள ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அமர்நாத், அவரை தட்டிக்கேட்டார்.
இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலானது. அமர்நாத்திற்கு ஆதரவாக வந்த அவரது நண்பர்கள், மாயகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி, கத்திகளால் வெட்டினர். பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
![]()
|
இது குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், வியாசர்பாடி, எம்.எம்.கார்டனைச் சேர்ந்த அமர்நாத், 28, அவரது நண்பர்களான பிரகாஷ், 25, சஞ்சய், 21, சதீஷ்குமார், 28, மதன், 23, பிரேம்நாத், 22, ஆகியோர், நேற்று காலை கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களுடன் இருந்த சிறுவனிடம் இருந்து ஐந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி : பெண் கைது
கோவை;அரசு வேலை வாங்கி தருவதாக, 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் காயத்ரி, 30; ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளர். அவருக்கு துடியலுார் சுப்புநாயக்கன்பாளையத்தை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் தம்பதிகள் பிரசன்னா, 29, அவரது மனைவி நிரஞ்சனா, 28, ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது இருவரும் காயத்ரியிடம், சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எங்களுக்கு தெரிந்த ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
அங்கு நீங்கள் பதிவு செய்து விட்டால், தேர்வு எழுதாமல் அரசு வேலை வாங்கி தருகிறோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி காயத்ரி, மேலும் சிலரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
காயத்ரி உட்பட 10 பேர், அரசு வேலைக்காக ரூ.23.95 லட்சத்தை நிரஞ்சனாவிடம் கொடுத்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.
இதுகுறித்து காயத்ரி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். நம்பிக்கை மோசடி பிரிவில், போலீசார் வழக்குப்பதிந்து நிரஞ்சனாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான பிரசன்னாவை தேடி வருகின்றனர்.
ஆடு திருடிய கும்பல் கைது
திருப்பாச்சேத்தி, : திருப்பாச்சேத்தியில் ஆடு திருடி வந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த டூவீலர், ஆட்டுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பாச்சேத்தி புறவழிச்சாலையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 2 டூவீலர்களில் வந்த நான்கு பேரை விசாரித்த போது ஏற்கனவே ஐந்து ஆடுகளை திருடி ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு மீண்டும் திருட வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஆடு திருடிய மதுரை ராமு 37, கிருஷ்ணமூர்த்தி, வேதஆல்வா எடிசன், கணேசன் 20, ஆகிய 4 பேர்களையும் கைது செய்தனர்.
காய்ந்த கடல் அட்டை 16 கிலோ பறிமுதல்
தொண்டி, : தொண்டி அருகே பாசிபட்டினத்தில் 16 கிலோ காய்ந்த கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாசிபட்டினம் கிராமத்தை சேர்ந்த அப்துல் சர்தார் 48, வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு ஒரு சாக்கு பையில் 16 கிலோ காய்ந்த கடல் அட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம். தப்பியோடிய அப்துல் சர்தாரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்திய நிகழ்வுகள்
புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை? ரூ.15 லட்சம் மோசடியால் பரபரப்பு!
தானே-மஹாராஷ்டிராடில், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, ரயில்வே ஊழியரிடம், 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆயுர்வேத சிகிச்சை மையம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மனைவிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, ஆயுர்வேத சிகிச்சை மையம், 15 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிப்ர வரியில் இருந்து, தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் ரயில்வே ஊழியர் புகார் அளித்து உள்ளார். சில மாதங்களுக்கு பின், ஆயுர்வேத சிகிச்சை மைய ஊழியர்கள் தன்னை தவிர்த்ததாகவும், அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக ஆயுர்வேத சிகிச்சை மைய ஊழியர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உலக நிகழ்வுகள்
இந்திய வம்சாவளி சிறுமி மரணம் அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை
வாஷிங்டன்-அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 5 வயது சிறுமி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு, 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2021 மார்ச்சில், அமெரிக்காவின் லுாசியானாவில் உள்ள ஹோட்டல் அறையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மியா படேல், 5, என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மீது திடீரென குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சிறுமி மியா படேல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜோசப் லீ ஸ்மித், 35, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், வாகன நிறுத்துமிடத்தில் மற்றொரு நபருடன் ஏற்பட்ட தகராறில், லீ ஸ்மித் துப்பாக்கியால் சுட்டதும், அந்த துப்பாக்கிக் குண்டு அருகில் இருந்த ஹோட்டல் அறையில் விளையாடி கொண்டிருந்தசிறுமி மியா படேல் மீது பாய்ந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது.
இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் டி மோஸ்லே, பரோல் மற்றும் தண்டனை குறைப்பு என, எந்த சலுகையும் இல்லாத, 60 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை, ஜோசப் லீ ஸ்மித்துக்கு வழங்கினார்.
மேலும், இது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதன் வாயிலாக, ஜோசப் லீ ஸ்மித்துக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.