வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'சமூகத்தில் தற்போது மாதாந்திர ஏலச்சீட்டு, அச்சுறுத்தலாக மாறியுள்ளது' என தெரிவித்த மாவட்ட கூடுதல் நீதிமன்றம், ஏலச்சீட்டு மோசடி வழக்கில், பெண்ணிற்கான தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்துள்ளது.
![]()
|
சென்னை தி.நகரில் வசித்து வரும் தனலட்சுமி - சுப்புராஜ் தம்பதி, தாங்கள் வசிக்கும் பகுதியில், 2010-----, 2012ம் ஆண்டு காலத்தில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களை நம்பி, அப்பகுதியைச் சேர்ந்த பலர் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். முதிர்வு காலம் முடிந்தும், பணத்தை உரியவர்களுக்கு தரவில்லை.
இதுகுறித்து, அண்ணாநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில், பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர்.
நம்பிக்கை மோசடி
விசாரணையில், 43 லட்சத்து 16 ஆயிரத்து 625 ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, தம்பதிக்கு எதிராக, சிட்பண்ட் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழக்கை, எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட தனலட்சுமிக்கு, 'நம்பிக்கை மோசடிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; ஏமாற்றுதலுக்கு மூன்று ஆண்டுகள் சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; சிட் பண்ட் சட்டப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம்' தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தனலட்சுமியின் கணவர் இறந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தனலட்சுமி மேல்முறையீடு செய்தார்.
போலீசார் சார்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:
சமூகத்தில் தற்போது மாதாந்திர ஏலச்சீட்டு பழக்கம், அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதில், பெரும்பாலும் சாதாரண மக்கள் குறி வைக்கப்படுகின்றனர்.
![]()
|
அதிக ஏலம் எடுத்த நபர்கள், அந்த தொகையை திருப்பித் தராததால், சீட்டு நடத்துபவர்கள், மற்றவர்களை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கும் நிலை உருவாகிறது.
ஆகையால், 'சீட்டு, பண்டு' நடவடிக்கைகள்பதிவு செய்யப்பட வேண்டும்.
தீர்ப்பு உறுதி
இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும், மனுதாரரின் வயது உள்ளிட்டவை கருதி, தண்டனை காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள், 43 லட்சத்து 16 ஆயிரத்து 625 ரூபாயை செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.