வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மின் வாரியத்தில், 54 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண, களப் பிரிவில், 10 ஆயிரத்து, 200 பேரை தேர்வு செய்ய மின் வாரியம் அனுமதி கோரி, அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.
தமிழக மின் வாரியத்தில், 'கிளாஸ் - 1, 2, 3, 4' ஆகிய பிரிவுகளில், 1.44 லட்சம் பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, 90 ஆயிரம் பேர் பணிபுரியும் நிலையில், 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.
அதிகரிப்பு
குறிப்பாக, மின் வினியோகம் தொடர்பான கள பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஒருவரே, இரண்டு - மூன்று பேரின் வேலைகளை சேர்த்து செய்ய வேண்டியுள்ளது.
எனவே, கள பிரிவில், 10 ஆயிரத்து, 200 பேரை தேர்வு செய்ய முடிவானது. இதற்கு மின் வாரியம், 2022 ஆகஸ்டில் அரசிடம் அனுமதி கேட்டது.

இதுவரை அனுமதி கிடைக்காதது, ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொது செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
புதிதாக ஆட்களை தேர்வு செய்யாத நிலையில், புதிய மின் திட்டங்கள், 'ஆதார்' பதிவு என, கூடுதல் பணிகளால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நடவடிக்கை
நிரந்தர பணிக்கு ஆட்களை எடுக்காமல், 'அவுட்சோர்சிங்' முறையில் நியமிக்கப் போவதாக, நிர்வாகம் தெரிவிக்கிறது.
இதனால் படித்த இளைஞர்கள், நிரந்தர பணியும், சரியான சம்பளமும் இல்லாமல் சிரமப்படுவர்.
எனவே, களப் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், தேவைக்கு ஏற்ப நிரந்தர ஊழியர்களை விரைந்து நியமிக்க, மின் வாரியமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.