வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவொற்றியூர்: சென்னை, எண்ணுார் முகத்துவாரத்தை துார் வாருதல், கரைகளை பலப்படுத்தி நட்சத்திர கான்கிரீட் கற்களாலான இரு துாண்டில் வளைவுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 135 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் முடியும் பட்சத்தில், வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி உபரி நீரை, கடலுக்கு அனுப்பலாம் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பினால் திறக்கப்படும் உபரி நீரானது, பல கி.மீ., துாரம் பயணித்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும்.
எண்ணுார் முகத்துவாரத்தில், கடல் அலை வாட்டம் காரணமாக, அடிக்கடி மணல் மேடுகள் ஏறி, அப்பகுதி சுருங்கி வெள்ள நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
வெள்ள பாதிப்பு
குறிப்பாக, 2015ம் ஆண்டு, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட, 90 ஆயிரம் கன அடி உபரி நீர், புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட 14 ஆயிரம் கன அடி நீர் என, வினாடிக்கு லட்சம் கன அடி நீரை உள்வாங்க முடியாமல், சிறிய வழிகொண்ட முகத்துவாரம் திணறியது.
அப்போது, கடலில் கலக்க முடியாமல் உபரிநீர் தேங்கிய நிலையில், நீர் வரத்து குறைவாக இருந்த பகிங்ஹாம் கால்வாயில் பின்னோக்கி பாய்ந்து எண்ணுார், எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு, ஆர்.கே., நகர் உள்ளிட்ட வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளை மூழ்கடித்தது.
பின், மூன்று நாட்கள் தேங்கிய வெள்ள நீர், பகிங்ஹாம் கால்வாயில் வடிந்து, முகத்துவாரம் வழியாக மீண்டும் கடலில் கலந்தது.
தொடர் கதை
இந்த வெள்ள பாதிப்பிற்கு, முகத்துவாரம் அகலமாக இல்லாதது தான், முதற்காரணமாக கூறப்பட்டது. அதன்படி, பருவமழை காலங்களில், எண்ணுார் காமராஜர் துறைமுக நிதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி, 'பொக்லைன்' இயந்திரங்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும். இருப்பினும், கடல் அலை வாட்டம் காரணமாக, மீண்டும் மணல் மேடு ஏறுவது தொடர்கதையாக இருந்தது.
எனவே, முகத்துவாரத்தை நிரந்தரமாக துார் வாரி, மணல் மேடு ஏற காரணமான கடல் அலையை கட்டுப்படுத்தும் வகையில், முகத்துவாரத்தின் இருபுறமும், பலமான துாண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

துாண்டில் வளைவு
பொது மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தின் நிதியான, 135 கோடி ரூபாய் செலவில், எண்ணுார் முகத்துவாரத்தை துார் வாரி, இருபுறமும் பலமான துாண்டில் வளைவுகள் அமைக்கும் பணி, பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, 'டிரஜ்ஜிங் கட்டர்' எனும், மணலை கத்தரிக்கும் இயந்திரங்களால், முகத்துவாரத்தை அடைத்திருக்கும் மணல் மேடுகளை கத்தரித்து, குழாய்கள் மூலம், பல அடி துாரம் கொண்டு சென்று கொட்டப்படுகிறது. அதன்படி, முகத்துவாரத்தின் வடக்கு மற்றும் தெற்கு புறமாக மணலை வெளியேற்றும் பணிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, முகத்துவாரம் இணையும் கடல் பகுதியின் இருபுறமும், 4,000, 8,000 மற்றும் 12 ஆயிரத்து 500 கிலோ அளவிலான நட்சத்திர கான்கிரீட் கற்களை கொட்டி, வடக்கு பக்கம் 1,640 அடி துாரத்திற்கும், தெற்கு பக்கம் 1,312 அடி துாரத்திற்கும் பிரமாண்ட துாண்டில் வளைவுகள் கட்டமைக்கப்பட உள்ளன.
தீர்வு
இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திட்ட காலமான 18 மாதங்களில் பணிகள் முடியும் பட்சத்தில், முகத்துவாரத்தில் மணல் மேடுகள் ஏறும் பிரச்னை இருக்காது. விசாலமான முகத்துவாரத்தில், வெள்ளக் காலத்தில் வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி உபரி நீர் வரை, கடலில் எந்த இடையூறுமின்றி கலக்கச் செய்ய முடியும்.
முகத்துவாரம் மற்றும் கழிமுக பகுதிக்கு, கடல் நீர் பரவல் என்பது இயல்பாக இருக்கும். இதன் மூலம் இறால், நண்டு, மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மீனவர்கள் வாழ்வாதாரம் பெருகும்.
துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்ட பின், முகத்துவார பகுதியில் கடல் அலை சீற்றம் குறையும். மீனவர்கள் தங்கள் படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தல் உள்ளிட்ட பணிகள் எளிதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.
மீனவர்கள் கோரிக்கை
எண்ணுாரில் ஆறும், கடலும் சேரும் முகத்துவார பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் இறால், நண்டு, மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். முகத்துவார பகுதியில் பல ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ரசாயனக் கழிவு, வடசென்னை அனல் மின் நிலையத்தின் சுடுநீர் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் இருந்து வரக்கூடிய கழிவுகளால் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் செத்து மடிகின்றன.இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, முகத்துவார பகுதியில் விடப்படும் கழிவு மற்றும் சுடுநீரை தடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.