கோவை: கோவை துடியலுார் சாலையில் அமைந்துள்ள, அரசு உதவிபெறும் கல்லுாரியில் பி.எச்டி., மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் மதன்சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பாரதியார் பல்கலை தரப்பில் வழிகாட்டிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சக பேராசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
படிக்கும் கல்லுாரியில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த, 10ம் தேதி பாரதியார் பல்கலை புகார் கமிட்டிக்கு இ-மெயில் வாயிலாக புகாரை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, 16ம் தேதி மாணவன், பேராசிரியர் சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அழைக்கப்பட்டு சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டது. அதன் முடிவில் நான்கு பக்கம் கொண்ட, அறிக்கையை குழு பல்கலைக்கு சமர்ப்பித்துள்ளது.
இருப்பினும், பாரதியார் பல்கலை தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கடந்த மூன்று நாட்கள் பல்கலையில் நாக்., தரக்குழு ஆய்வுகள் மேற்கொண்டதால், பல்கலையின் நன்மதிப்பு பாதிக்காமல் இருக்க இதுபோன்ற அனைத்து புகார்களையும் நிலுவையில் வைத்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவன் பி.எச்டி., படிப்பை தொடர முடியாமல் தீர்வுக்காகவும், உரிய நடவடிக்கைக்காகவும் காத்திருக்கும் சூழலில், பல்கலையின் செயல்பாடு அதிருப்தியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.இதற்கிடையில், பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்க, கல்லுாரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) முருகவேலிடம் கேட்டபோது, ''கல்லுாரி அளவில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான எழுத்துப்பூர்வமான கோப்பு கல்லுாரியில் இருந்து பல்கலைக்கு இதுவரை வரவில்லை. வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை பெண்டிங் உள்ளது; முழுமை பெற்று உறுதியானதும் வழிகாட்டி அங்கீகாரம் ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என்றார்.
ஆடியோ ஆதாரம்
முதல்கட்ட விசாரணைக்கு முன்பு சம்பந்தப்பட்ட பேராசிரியர் மதன்சங்கர் பாதிக்கப்பட்ட மாணவனை அழைபேசியில் அழைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டார். அதுசார்ந்த ஆடியோ பதிவும் மாணவன் விசாரணை குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். அதன் வாயிலாக, பேராசிரியரின் மீது புகார் உறுதியாகியுள்ள நிலையில், நடவடிக்கை தாமதிக்காமல் விரைந்து பல்கலை நிர்வாகம் செயல்படவேண்டும். மேலும், பாதியில் படிப்பை நிறுத்தியுள்ள மாணவனுக்கு தகுதியான வழிகாட்டி தேர்வு செய்து வழங்கி, கல்வியை தொடர பல்கலை நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.