வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையில் புற்றீசலாகப் பெருகி வரும் செக்யூரிட்டி நிறுவனங்களால், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
கோவை நகரம், ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்து வருகிறது; மக்கள் தொகை பெருகுவதால், தொழில், வணிக, கல்வி நிறுவனங்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, குற்றச்சம்பவங்களும் அதிகமாகின்றன.

தேவை அதிகரிப்பு
குடியிருப்புவாசிகள், தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகம் செய்வோர் பலரும், தனியார் செக்யூரிட்டிகளை நம்ப வேண்டிய நிலை உள்ளது. வங்கிகள், ஏ.டி.எம்.,களும் இந்த தனியார் செக்யூரிட்டிகளின் பாதுகாப்பிலேயே இருக்கின்றன.
இதனால் செக்யூரிட்டிகளின் தேவை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. கூடவே, செக்யூரிட்டி நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. தினமும் பல ஆயிரம் செக்யூரிட்டிகள் தேவைப்படுவதால், உடல் மற்றும் கல்வித்தகுதியற்ற ஆட்கள் பலரும் பணிக்கு எடுக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு மிகமிகக் குறைவான ஊதியமே தரப்படுகிறது. ஆனால் குடியிருப்புவாசிகளிடமும், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நடத்துவோரிடமும், இவர்களின் பெயரில் அதிக ஊதியம் பெற்று, ஏஜன்ட்களால் பெருமளவு தொகை கமிஷனாக எடுத்துக் கொள்ளப்படுவதாக, புகார்கள் குவிகின்றன.
ஒரு நாளுக்கு 113 ரூபாய் கமிஷன்!
ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு, எட்டு மணி நேரத்துக்கான ஊதியமே வழங்கப்படுகிறது. ஒரு செக்யூரிட்டிக்கு ஒரு நாளுக்கு 500 ரூபாய் என்று பேசப்பட்டு, அதில் 113 ரூபாய் கமிஷனாக எடுத்துக் கொள்ளப்பட்டு, 387 ரூபாய் மட்டுமே ஊதியமாகத் தரப்படுவதாக, பாதிக்கப்பட்ட செக்யூரிட்டிகள் குமுறுகின்றனர்.
செக்யூரிட்டியாகப் பணியாற்றி வரும் பேரூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், ''ஒவ்வொரு செக்யூரிட்டி சம்பளத்திலும் தினமும் இப்படி கமிஷன் எடுத்துக் கொள்ளும் ஏஜன்ட்கள், ஒரு நபரின் ஊதியத்தில் மாதத்துக்கு ரூ.2,500லிருந்து ரூ.3 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். இது உழைப்பே இல்லாமல், அடுத்தவர் உழைப்பைச் சுரண்டும் கொள்ளையாகும்,'' என்றார்.

முன்னாள் ராணுவ அதிகாரிகள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் பலராலும், நகருக்குள் ஏராளமான செக்யூரிட்டி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் மிகக்குறைவான நிறுவனங்களே, தரமான முறையில் ஆட்களை எடுத்து, நியாயமான முறையில் ஊதியம் கொடுத்து, பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன. பல நிறுவனங்கள் தரமற்ற முறையில் இயங்கி வருகின்றன.
எனவே, கோவை நகரில் செக்யூரிட்டி நிறுவனங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து, அவற்றின் செயல்பாட்டையும் 'செக்' செய்ய வேண்டியது, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் அவசரக்கடமையாகும்.
எனவே, கோவை நகரில் செக்யூரிட்டி நிறுவனங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து, அவற்றின் செயல்பாட்டையும் 'செக்' செய்ய வேண்டியது, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் அவசரக்கடமையாகும்.
போலி கார்டு...போலி முகவரி!
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்று போலியாக விசிட்டிங் கார்டு அடித்து, போலி முகவரிகளைக் கொடுத்தும் சில நிறுவனங்கள் நடத்தப்படுவதாக, செக்யூரிட்டியாகப் பணியாற்றும் பலரும் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கின்றனர். இவர்கள் முறைப்படி எந்தத் துறையிலும் பதிவு செய்வதில்லை. முறையான ஊதியம், ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பும் தருவதில்லை.
இதுபோன்று கோவையில், நுாற்றுக்கணக்கான செக்யூரிட்டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வங்கி, ஏ.டி.எம்., பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டி நிறுவனங்களுக்கு மட்டும், மாநகர போலீசார் சார்பில் சமீபத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மற்ற நிறுவனங்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் கூட, மாநகர போலீசாரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் வயதானவர்களிடம் அதிக நேரம் வேலை வாங்கி, குறைவான சம்பளம் கொடுக்கும் மனிதாபிமான மீறல் ஒருபக்கம் நடப்பதோடு, மக்களின் பாதுகாப்பும் இதனால் கேள்விக்குறியாகி வருகிறது.