தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி:
'ஆன்லைன்' சூதாட்டத்தை ஒழிக்க, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் இரண்டாவது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க தமிழக அரசு, ஆயிரம் மடங்கு உறுதியாக உள்ளது. அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும் எதிர்கொள்வோம்.

மத்திய அரசோட முட்டலும், மோதலுமா இருக்கிற வரைக்கும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு மட்டுமல்ல, வேற எந்த சட்டமா இருந்தாலும், அதை நிறைவேற்றுவதில் லட்சம் மடங்கு உறுதியா இருந்தாலும், ஒண்ணும் நடக்காது!
தமிழக பா.ஜ., துணைதலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'என்னை கைது செய்தாலும் கவலையில்லை' என்கிறார் காங்., ராகுல். ஒரு கட்சி தலைவருக்கு, தண்டனை குற்றவாளி என்றால் என்ன என்று தெரியாதா... அவ்வளவு வீராப்பு இருந்தால், மேல்முறையீடு செய்யாமல், 'நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப, இரு ஆண்டுகள் சிறைக்கு செல்கிறேன்' என்று தைரியமாக சொல்ல வேண்டியது தானே?

அதெப்படி சொல்லுவாரு... ஜெயிலுக்கு போயிட்டா, நாலஞ்சு நாள்ல அவரை எல்லாரும் மறந்துடுவாங்களே!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி:
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு சேராததால், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் தங்கள் உயிர், உடல் நலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றியவர்கள், துாய்மை பணியாளர்கள். அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழக நிதி அமைச்சரிடம் கேட்டால், 'மனம் இருக்கிறது; பணம் இல்லை'ன்னு விதண்டாவாதம் பேசுவாரே!
பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி:
'மோடி' என்ற சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்காக, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் தொடர்ந்த அவதுாறு வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதை போல, காங்., ராகுல் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார். இதை பார்த்தாவது, தி.க., வீரமணி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவரு சொல்றதை பார்த்தா, வீரமணிக்கும் ஏதாவது, 'ஸ்பெஷல் ஆப்பரேஷன் பிளான்' பண்ணி வச்சிருக்காங்களா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு:
ஏப்., 14ல், தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளோம். தி.மு.க., புள்ளிகள், 27 பேரின் சொத்து மட்டுமே, 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகத்தின் மொத்த வருமானத்தில், 10 சதவீதம், தி.மு.க.,வின், 27 பேரிடம் உள்ளது. அவர்களில் சிலர் அமைச்சர்கள்.

அப்ப, தமிழ் புத்தாண்டு அன்னைக்கு நிறைய பேருக்கு தலை சுத்த போகுதுன்னு சொல்லுங்க!