திருச்சி: பதவி வெறியாலும், ஒரு சிலரின் சுயநலத்தாலும் அ.தி.மு.க., பலவீனமாகி இருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
திருச்சியில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அளித்த பேட்டி: கடந்த ஆண்டு, மேல்நிலை வகுப்பு படித்த மாணவர்கள் பலரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதாக அமைச்சர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் புள்ளி விவரங்களோடு தெளிவுபடுத்த வேண்டும். அது அமைச்சரின் கடமை. பதவி வெறியாலும், ஒரு சிலரின் சுயநலத்தாலும் அ.தி.மு.க., பலவீனமாகி இருக்கிறது.
அ.தி.மு.க.,வில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். அமமுக பொறுப்பாளர்கள் சிலர் மீது குறைகள் இருப்பதாக கூறினால், அவர்களுக்கு பதிலாக முதியவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ல், அரசியல் காரணங்களுக்காக, சிலரது பதவிகள் பறிக்கப்படும் பொழுது, அவர்கள் மேல்முறையீடு செய்து, இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் பதவியில் இருக்கலாம் என்பதை, ராகுல் தான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த சட்டம் அவரையே இன்று பாதித்து இருக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை பற்றி கருத்து கூற எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.