திருச்சி: திருச்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய, அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடந்த மைதான திறப்பு விழா அழைப்பிதழில், தி.மு.க., எம்.பி., சிவா பெயர் போடாததால், அவரது ஆதரவாளர்கள், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், எம்.பி., வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின், திருச்சி அமர்வு நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எம்.பி.,யின் ஆதரவாளர்களையும், போலீஸ் ஸ்டேஷன் உள்ளே புகுந்து, தாக்கினர். அப்போது, பெண் போலீஸ் ஒருவரும் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக, அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட செசன்ஸ் நீதி மன்றத்தில், ஐந்து பேருக்கும் ஜாமின் கோரிய மனு மீது இன்று (மார்ச் 27) விசாரணை நடந்தது. அப்போது, நீதிபதி பாபு, போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து தாக்குதல் நடத்திய ஐந்து பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.