வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும் பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். அனைவருக்கும் வீடு என்றால், வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்றே பொருள். மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிக்காத திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஆதிக்க வர்க்கத்தால் பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டார்கள். ஆணின் வெற்றிக்குப் பின் பெண்களின் உழைப்பு உள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளில் அதிக மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டிலும், வெளியிலும் பெண்கள் எத்தனை மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் யாருக்கு பயனளிக்கும் என்பது பொது மக்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.