ஷிமோகா: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சதாசிவா குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு பஞ்சாரா சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கான பங்கு குறைக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தனர். இதற்காக ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்கினர். அதில், கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்தன. மேலும், அங்கிருந்த பா.ஜ., கொடியை அகற்றிவிட்டு, தங்களது சமூக கொடியையும் ஏற்றினர். தடுப்புகளை தள்ளிவிட்டு சென்ற போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசினர். அதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையின் உருவபொம்மையை எரித்தனர். அந்நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் எஸ்.பி., மிதுன்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.