ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அமம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூரில், தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சந்துரு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து, ஆத்தூர் மற்றும் வாழப்பாடி சப்டிவிஷன் போலீசார் தனியார் பள்ளியில் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்த மாணவர் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சந்துரு, ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். 3வது முறையாக தேர்வு எழுத தயாராகி வந்த இவர், இதே பயிற்சி மையத்தில் 2வது முறையாக படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்வதற்காக கயிறு உள்ளிட்டவற்றுடன் பயிற்சி மையத்திற்கு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.