பங்குச்சந்தையில் சமீபத்தில் இறக்கத்தை கண்ட அதானி குழும பங்குகளில் முதலீட்டை தொடர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறும் 27.73 கோடி கணக்குகளை கையாண்டு வருகிறது. இ.பி.எப்.ஓ தனது 15 சதவீத நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. கடந்தாண்டு மார்ச் வரையில், இ.பி.எப்.ஓ, இ.டி.எப் திட்டங்களில் 1.57 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில்மேலும் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனை முழுமையாக அதானி குழுமம் மறுத்தது. தொடர்ந்து அதானி பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
![]()
|
இதனிடையே, இ.பி.எப்.ஓவை நிர்வகிக்கும் 233வது மத்திய டிரஸ்டிகள் வாரிய கூட்டம் மார்ச்.,27,28ல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அதிக சம்பளத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியம், இந்தாண்டுக்கான பி.எப்., வட்டி விகிதம் மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய அமைப்பின் நடவடிக்கைகள், மக்களை பாதிக்க கூடுமென்பதால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. டிரஸ்டி வாரிய கூட்டத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக முடிவு எடுக்கும் வரை, முதலீட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி பங்குகள் சரிவை சந்தித்த பின்னர், இபிஎப்ஓ தனது முதலீட்டில் வெளிப்படை தன்மையுடன், பொறுப்புடன் செயல்பட வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் சிலர், நீண்ட காலத்திற்கு சிறந்த வருவாயை பெறும் வகையில், முதலீட்டை பரவலாக்க வேண்டுமென கூறியுள்ளனர்.