சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் இருக்கையில், 'தல' தோனி மஞ்சள் பெயின்ட் அடித்து புதுப்பிக்கும் பணியில் இறங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
16வது ஐ.பி.எல் தொடர் அகமதாபாத்தில் வரும் மார்ச்.31ம் தேதி துவங்குகிறது. துவக்க போட்டியில், நான்கு முறை சாம்பியனான சி.எஸ்.கே அணி, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏப்.3ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், சென்னை அணி, லக்னோ அணியுடன் மோதுகிறது. நடப்பு தொடரில் சாதிக்க சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
![]()
|
முதல் போட்டிக்கான டிக்கெட் விநியோகம் ஆன்லைனிலும், மைதானத்திலும் இன்று காலை துவங்கியது. இதற்கு மத்தியில், ஐ.பி.எல் தொடருக்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கேலரி திறக்கப்பட்டிருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஸ்பிரே கொண்டு மைதானத்தின் இருக்கைகளை மஞ்சள், நீல பெயின்ட் அடிக்கும் பணியில் இறங்கினார். இது தொடர்பான வீடியோவை 'நிச்சயமாக மஞ்சள் நிறமாக இருக்கும்' என்று சி.எஸ்.கே தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதுவரை சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனை லைக் செய்ததோடு, 3 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்திருந்தனர். 4.40 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வீடியோ வைரலானது.
![]()
|
டிவிட்டரில் வீடியோவை ஒருபுறம் ரசிகர்கள் கொண்டாட, மறுபுறம் நெட்டிசன் ஒருவர், 'இதெல்லாம் நல்லா தான் இருக்கு. ஆன்லைனில் டிக்கெட் எங்க இருக்கு. வா..மா மின்னல் காமெடி போல இருக்கு' எனவும், மற்றொருவர், 'தோனி வீடியோ போட்டு மைண்ட் சேஞ்ச் பண்றீங்களா..டிக்கெட் எங்க மேன் ஆன்லைன்ல' என பதிவிட்டிருந்தார். இதை போன்று, பல ரசிகர்களும் தங்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்கவில்லை என புலம்பி தள்ளியுள்ளனர்.