புதுடில்லி: எம்.பி பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராகுல், மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசியதற்கு, நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுலை எம்.பி பதவியில் இருந்து லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார். ராகுல் எம்.பியாக பதவி வகித்து வரும் போது, அரசு சார்பில் இல்லம் அளிக்கப்பட்டது. அதன் படி, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராகுல், தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில் ராகுலுக்கு அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்' எனவும் கூறப்பட்டுள்ளது.

விமர்சனம்
:
முன்னதாக ராகுல் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்து, வெளியிட்ட அறிக்கை: எல்ஐசி மூலதனம், அதானிக்கு!. ஸ்டேட் வங்கியின் மூலதனம், அதானிக்கு!. இபிஎப்ஓ அமைப்பின் மூலதனமும் அதானிக்கு!. மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பிறகும், மக்களின் ஓய்வூதிய பணத்தை அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவது ஏன்? விசாரணையும் இல்லை, பதிலும் இல்லையே பிரதமரே? ஏன் இவ்வளவு பயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.