சென்னை, தமிழக அரசு அறிவித்துள்ள, மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை, தமிழகத்தில் ஒரு கோடி பெண்கள் பெறவுள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., சார்பில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில், குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்; அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள், பெரும் வரவேற்பை பெற்றன.
உரிமைத்தொகை
மகளிர் அதிகமுள்ள தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற, இந்த அறிவிப்புகளும் காரணமாக அமைந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மகளிருக்கான இலவச பஸ் பயணத் திட்டம் அமலுக்கு வந்தது.
ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வந்தன.
சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலிலும், இந்த பிரச்னை எதிரொலித்தது. அப்போது, 'பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அதன்படி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 'மகளிருக்கான உரிமைத் தொகை தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டம், செப்., மாதம் நடைமுறைக்கு வரும்' என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உரிமைத் தொகை பெற தகுதியுள்ளவர்கள் யார் என்ற விவாதம் எழுந்தது. தகுதி என்ற வரையறையை புகுத்தினால், இரண்டு கோடி பெண்களில், 80 லட்சம் பேருக்கு மட்டுமே மாதம் 1,000 ரூபாய் கிடைக்கும் என்ற நிலை உருவானது. இதற்கு எதிராக, பல தரப்பிலும் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என, சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் யார் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
சட்டசபையில் அவர் கூறியதாவது:
பட்ஜெட்டில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி, பொருளாதார வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தும் விதம் குறித்தும், அதில் பயன் பெறப் போகும் குடும்பத் தலைவியரின் தேர்வு குறித்தும் விளக்கத்தை அளிக்க வேண்டியுள்ளது.
கிராம பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாக, இன்றும் பெண்கள் இருக்கின்றனர். சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு.
ஆணின் வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்து இருப்பர்!
முன்னுரிமை
அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டால், குடும்ப சொத்துக்கள் அனைத்திலும் சமமாக பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமல் இடம் பெற்று இருக்கும். இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிப்பதற்கு தான், மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
இந்த திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல், உரிமைத் தொகை என கவனத்துடன் பெயரிடப்பட்டு உள்ளது. உலகில் பல நாடுகளில் சோதனை முறையில் 'யுனிவர்சல் பேஸிக் இன்கம்' என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்திய திட்டத்தின் வாயிலாக, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால், வறுமை பாதியாகக் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
'கிடைக்கும் நிதியை தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து, மருத்துவச் செலவிற்கும் பயன்படுத்த, மகளிர் முன்னுரிமை தருகின்றனர். சிறு சிறு தொழில்களை செய்ய முன்வருகின்றனர்' எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே, இவ்வளவு பயன்கள் கிடைக்கிறது என்றால், தமிழகத்தில் செயல்படுத்த இருக்கும் இந்த மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ் சமூகத்தில் உருவாக்கப் போகும் பயன்களை எண்ணி பார்க்க வேண்டும்.
மனக்கணக்கு
இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில், 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பேர் பயன் பெறுவர் என்று, பலர் மனக்கணக்கு போட்டு வருகின்றனர். தேவையானவர்களுக்கு, தேவையான உதவியை உரிய நேரத்தில் தேடித் தேடி வழங்குவது தான் நலத் திட்டங்களின் நோக்கம்.
நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள், அதிகாலையில் கடற்கரை நோக்கி செல்லும் மீனவ மகளிர், கட்டுமான தொழில் பணிபுரிபவர்கள், சிறிய கடைகள், வணிகம் செய்பவர்கள், சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரிபவர்கள்.
ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக் கூடியவர்கள் என, தங்கள் விலை மதிப்பில்லாத உழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள், இத்திட்டத்தால் பயன் பெறுவர்.
தமிழகத்தில் மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் இடம் பெறக்கூடிய இந்த திட்டம், ஒரு கோடி குடும்பத் தலைவியருக்கு வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
3ல் ஒரு பெண்
தமிழகத்தில் ஏறத்தாழ 3.75 கோடி பெண்கள் உள்ளனர். ஒரு கோடி பேருக்கு உரிமை தொகை என்றால், 26 சதவீதம் பெண்கள், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பெண், மாதம் ஆயிரம் ரூபாய்க்கு, இன்னமும் அரசை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாரா?