சென்னை: நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதை தடுக்க, கணினி கண்காணிப்போடு கொள்முதல் செய்ய தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை முயற்சி தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட உள்ளது.
அதன்படி, அறுவடை செய்த நெல்லை மூட்டைகளில் அடைக்காமல், கொள்முதல் நிலையத்திற்கு விவசாயி கொண்டுவரவேண்டும். அவருடைய வாகனத்தில் இருந்து அப்படியே கன்வேயர் பெல்டில் நெல் கொட்டப்படும்.
அந்த பெல்ட் நகரும்போது, கணினி வாயிலாக நெல்லின் ஈரப்பதம் கண்டறியப்படுவதுடன் கல், உமி போன்ற அசுத்தங்கள் தூற்றப்படும்.
பின், 50 கிலோ மூட்டைகளில் அடைத்து எடை போடப்பட்டு, விவசாயிக்கு கணினி வாயிலாக ரசிது வழங்கப்படும். இதன் மூலம், கொள்முதல் நிலைய நடத்துனர்கள் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 50 ரூபாய் கமிஷன் வாங்குவது தடுக்கப்படும் என, வாணிப கழகம் நம்புகிறது.
புதிய வகை கொள்முதல் நிலையங்கள் மணிக்கு 20 டன் நெல்லை கையாளும் திறனோடு அமையும்.
கொள்முதல் நிலையங்களில் தற்போது நாளொன்றுக்க சராசரியாக 40 டன் கொள்முதல்செய்யப்படுகிறது.
அதன்படி, கொள்முதல் நடவடிக்கை விரைவாக நடந்து, விவசாயிகளுக்கு நேரம் மிச்சமாகும். இறக்கு கூலியும் விவசாயிகளுக்கு மிச்சமாகும்.
இந்த முயற்சி வெற்றி கரமாக அமைந்தால்,அடுத்தடுத்து தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 10 புது வகை கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2022 செப்டம்பரில் துவங்கியது. இது, இந்தாண்டு ஆகஸ்டில் முடிவடைகிறது.இந்த சீசனில் இதுவரை 29.47 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, 2,347 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.