வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
வா.ராஜன், தென்காசியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, அன்னாரது முறை தவறிய பேச்சுக்காக, குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம், இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. தண்டனைவிதித்த நீதிமன்றமே, உடனடியாக ஜாமினும் வழங்கியுள்ளது.
இந்த வழக்குக்கும், பிரதமர் மோடிக்கும்,எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. இது, தெளிவாக தெரிந்திருந்தும், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு சேர, என்னமோ நீதிபதி ஆசனத்தில்,பிரதமர் மோடியே அமர்ந்து, ராகுலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது மாதிரி, வானுக்கும், பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கின்றன.
![]()
|
இவர்களின் துள்ளலை கூர்ந்து கவனிக்கும் போது, ஒரு விஷயம் பட்டவர்த்தனமாக தெரிய வருகிறது... அதாவது, அரசியல்வாதிகள், அரசியல் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் கொலை செய்தால் தண்டிக்கக் கூடாது; ஊழல் செய்தால், கண்டு கொள்ளக் கூடாது...
அவர்கள் நாட்டை கொள்ளையடித்தால் பொருட்படுத்தக் கூடாது; அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று, நம் தாய் நாட்டை பற்றி கேவலமாக பேசினால், அதற்கும் எதிர்வினை ஆற்றக்கூடாது...
வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, உள்நாட்டு காவல் துறை, புலனாய்வு அமைப்புக்கள், ராணுவத்தின் முப்படைகள் என எதுவும், அரசியல்வாதிகள் அத்துமீறி, நாட்டைக் காட்டி கொடுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபட்டாலும் கண்டு கொள்ளக் கூடாது. முடிந்தால், அவர்கள் அப்படி காட்டி கொடுப்பதற்கு, தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். அப்படித்தானே...!
கடந்த, 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வராமல், மேலும் ஐந்தாண்டு காலம், மத்தியில் காங்கிரஸ் அரசு நீடித்து இருந்தால், மேலே சொன்ன அத்தனையும் அட்சரம் பிசகாமல் நிகழ்ந்திருக்கும்.
என்ன செய்ய... நாட்டை கடவுள், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காபந்து பண்ணி விட்டார். அது பொறுக்காமல், புழுதி வாரி துாற்றுகின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மார்க்கோசும், உகாண்டா சர்வாதிகாரி இடி அமீனும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று, நாட்டை விட்டு உயிர் தப்ப ஓடியது மாதிரி, இந்த நாட்டிலுள்ள அரசியல்வா(வியா)திகளும் நாட்டை விட்டு ஓடும் காலம் விரைவிலேயே வரும்.
வாழ்க பாரதம்; வந்தே மாதரம்!