வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி, : சிறிய குற்றங்களில் ஈடுபட்டு, போலீசில் சிக்கிய நபர்களை விசாரணையின் போது, குறடு கொண்டு பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங்கை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் துணைக்கோட்ட ஏ.எஸ்.பி.,யாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இருந்தவர் பல்வீர்சிங். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020 'பேட்ச்' ஐ.பி.எஸ்., அதிகாரி.
இவர், சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகிறவர்களை விசாரிக்கும் போது, குறடு கொண்டு பற்களை பிடுங்குவதாகவும், அதன் பின் கூழாங்கற்களை வாயில் போட்டு மெல்ல செய்வதாகவும் புகார் எழுந்தது.
![]()
|
அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா, குடிபோதையில் தெருவில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தினார். ஏ.எஸ்.பி., மற்றும் போலீசார் அவரது பற்களை பிடுங்கினர்.
இதேபோல், 14க்கும் மேற்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டன. கடும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி, குடும்ப பிரச்னைகளில் வரும் கணவர்களின் பற்களையும் பிடுங்கியதால், அவரது விசாரணை முறை சர்ச்சைக்குள்ளானது.
புகாரின் அடிப்படையில், சம்பவம் குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது ஆலம் சபீர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனால் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங்கை, சென்னை யில் போலீஸ் தலைமையிட காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அம்பாசமுத்திரம் புதிய டி.எஸ்.பி.,யாக வெங்கடேசன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.