திருக்கோஷ்டியூர், : சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பூமி நீளா சமேத சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் 1961, 1992, 2004 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி யாக சாலையில் 32 வேதிகை, 44 குண்டங்களுடன் மார்ச் 23ல் பூஜைகள் துவங்கின. பட்டாச்சார்யார் ராமகிருஷ்ணன் தலைமையில் பட்டாச்சார்யர்கள் பூஜைகளை செய்தனர்.
நேற்று அதிகாலை சிறப்பு பூஜை முடிந்து 8ம் கால யாகபூஜை பூர்த்தியாகி பூர்ணாகுதி திருவாராதனம் நடந்தது. காலை 9:30 மணியளவில் கலசங்கள் புறப்பாடாகி விமான, ராஜகோபுரம் சென்றன. தொடர்ந்து காலை 9:52 மணி முதல் விமானங்கள், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின் அலங்கார திருவாரதனமும், சர்வ தரிசனமும் நடந்தது.
ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் அலுவலர்கள் செய்தனர்.
தெற்கு கோபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வழியில் சென்ற பக்தர்களுக்கு சரியான தடுப்பு அமைக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டி.எஸ்.பி., ஆத்மநாதன் தலைமையில் போலீசார் கட்டுப்படுத்த திணறினர். ராஜகோபுரம் வாசலில் தேவஸ்தான பணியாளர்கள் அடையாளம் காட்டுபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்தில் பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்க போலீசார் அனுமதி மறுத்தனர். தீபாராதனை பொருட்கள் எடுத்து சென்ற பட்டாச்சார்யார்களையும் போலீசார் தடுத்து நிறுத்த, அவர்கள் போராடி சென்றனர். எஸ்.பி., செல்வராஜ் தலையிட்டு ஒருவர் மட்டும் செல்ல அனுமதித்தார். காலை 9:52 மணிக்கு ராமானுஜர் சன்னதி விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின் நிர்வாகத்தினர் காண மீண்டும் புனித நீர் ஊற்றப்பட்டது.