சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.5ல் பம்பையில் ஆராட்டு நடக்கிறது.
சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்ட பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஸ்ரீகோயிலில் சுத்திகலச பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நெய்யபிேஷகம், கணபதி ேஹாமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தன.
காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துக்கான பூஜைகள் துவங்கியது. பூஜிக்கப்பட்ட கொடிப்பட்டம் மேளதாளத்துடன் பவனியாக கோயிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. நெற்றிப்பட்டம் கட்டிய யானை கொடிமரத்தின் அருகே வந்தது.
தொடர்ந்து தந்திரி பூஜைகள் நடத்திய பின் காலை 9:45 மணிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அப்போது சரணகோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.
இவ்விழா ஏப்., 5 வரை நடக்கிறது. ஏப்., 4 வரை தினமும் மதியம் உற்ஸவபலி, இரவில் ஸ்ரீபூதபலி என்ற யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 4 ஒன்பதாம் நாள் விழாவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை, ஏப்., 5 மதியம் 12:30 மணிக்கு பம்பையில் ஆராட்டும் நடக்கிறது.