ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் விளை நிலங்களில் நிலவும் ஈரப்பதத்தை பயன்படுத்தி, விவசாயிகள் கோடை உழவு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆனந்தூர், திருத்தேர்வளை, சாத்தனூர், ஆயங்குடி, சேத்திடல், சீனாங்குடி சோழந்தூர், சனவேலி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், நெல் அறுவடைக்கு பிறகு, அறுவடை வயல்களில் ஈரப்பதம் இல்லாததால், உழவு செய்யப்படாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இப்பகுதியில் பெய்த சாரல் மழையால், விளை நிலங்களில் உழவு பணிக்கு ஏற்ற ஈரப்பதம் நிலவி வருகிறது. தற்போது, வயல்களின் நிலவும் ஈரப்பதத்தை பயன்படுத்தி, கோடை உழவு பணியை டிராக்டர் மூலம் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விளை நிலங்களில் கோடை காலத்தில் உழவு பணியை மேற்கொள்வதன் மூலம், விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறுவதை தடுப்பதுடன், அடுத்து சாகுபடி செய்ய உள்ள பயிர்களுக்கு ஏற்ற வகையில் மண்வளத்தை தயார்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.