வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகளின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் சட்டவிரோத மின்வேலிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கை வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜாவிடம் அளிக்கப்பட்ட மனு:
கோடையில் குடிநீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகள் இடம் பெயர்கின்றன. அப்போது, மின்வேலிகளில் சிக்கி யானைகள் பலியாகின்றன. மூன்று ஆண்டுகளில், மின்சாரம் தாக்கி, 100க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.
![]()
|
மேட்டுப்பாளையம், பிளாக்தண்டர் பின்புறம் உள்ள குளத்தில் நீர் இல்லாததால், யானைகள் ஊட்டி சாலையை கடந்து, ஓடந்துறை பகுதிக்கு வருகின்றன. இங்கு, யானை வழித்தடங்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களில், மின் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மின்வேலிகளில் டி.சி., மின்சாரத்துக்கு பதில் ஏ.சி., மின்சாரத்தை பயன்படுத்துவதாலும், வெடிகள் வைக்கப்படுவதாலும் யானைகள் கொல்லப்படுகின்றன.
எனவே, மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள ஊமப்பாளையம், வனக்கல்லுாரி, பாலப்பட்டி, சமயபுரம், உப்புப்பள்ளம் போன்ற இடங்களில் உள்ள மின் வேலிகளை ஆய்வு செய்து, சட்டவிரோத மின்வேலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, மாவட்ட வன அலுவலருக்கு எம்.பி., பரிந்துரை செய்தார்.