திருவாடானை-திருவாடானை வேளாண் அலுவலகத்தில் உதவி இயக்குனர் பணியிடம் ஒரு ஆண்டுக்கு மேலாக காலியாக இருப்பதால், தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற முடியவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை தாலுகா திகழ்கிறது.
இங்குள்ள வேளாண் அலுவலகத்தில் உதவி இயக்குனர் பணியிடம் ஒரு ஆண்டிற்கு மேலாக காலியாக இருப்பதால் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் தேவையான மானிய திட்டங்கள் கிடைப்பது கேள்விக்குறியதாகியுள்ளது. திருவாடானை தாலுகாவில் 47 ஊராட்சிகள் உள்ளன. விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் 26 ஆயிரம் எக்டேரில் பயிர்கள் சாகுபடி நடக்கிறது.
வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலம் மானிய திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவது வழக்கம். ஆனால் வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக காலியாக உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் உதவி இயக்குனர் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
இருந்தபோதும் வேளாண்மை மூலம் அரசு அறிவிக்கும் திட்டங்களை விவசாயிகள் அலுவலகத்திற்கு நேரில் சென்று உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
ஆகவே திருவாடானை வேளாண் அலுவலகத்திற்கு நிரந்தர உதவி இயக்குனர் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.