அரசு மருத்துவமனை சாதனை
பரமக்குடி--பரமக்குடி அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை, 67 நாட்கள் சிகிச்சைக்கு பின் டாக்டர்கள், நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் 32, இவரது மனைவி சவுமியா 21. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஜன.19 அன்று குறை பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. முதல் குழந்தை 910 கிராம் மற்றும் இரண்டாவது 1250 கிராம் மட்டுமே இருந்தது. இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ் வழிகாட்டுதலின்படி, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலைமை மருத்துவர் நாகநாதன் மேற்பார்வையில், டாக்டர் முத்தரசன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்கள் ரமேஷ், தினேஷ் பாபு, பிரியதர்ஷினி, கார்லின் சத்திய பிரபா, சண்முகப்பிரியா மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டது.
இதன்படி இரண்டு குழந்தைகளும் 24 மணி நேரமும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டரில் வைத்து கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தாய் மற்றும் குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அப்போது முதல் ஆண் குழந்தை 1.714 கிலோ கிராம் மற்றும் இரண்டாவது குழந்தை 1.884 கிலோ கிராம் எடை உயர்ந்து இருந்தது.
67 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் தாய், குழந்தைகள் இருவரும் வீடு திரும்பினர். பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இதுபோன்ற முயற்சியில் சாதித்துள்னர்.