துப்புரவு பணியாளர்கள் தடுமாற்றம்
பரமக்குடி-பரமக்குடி நகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதடைந்துள்ளதால், துப்புரவு பணியாளர்கள் தடுமாறுகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட தெருக்களில் துப்புரவு பணியாளர்கள் 3 சக்கர வாகனங்களில் குப்பை அள்ளி செல்கின்றனர்.
இந்த நகராட்சியில் டம்பர் பிளேசர் எனப்படும் தானியங்கி குப்பை லாரி இருந்தது. இதன் மூலம் சர்வீஸ் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் சேரும் குப்பையை எடுத்து குப்பை கிடங்கில் சேர்த்தனர்.
சில மாதங்களாக இதுபோன்ற தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் மூன்று சக்கர வாகனங்களில் மட்டுமே வீடுகளில் இருந்து மக்கும், மக்காத குப்பையை பிரித்து வாங்கி செல்கின்றனர்.
ஆனால் இந்த வாகனங்களும் ஓட்டை உடைசலான நிலையில் குப்பை முழுவதும் மீண்டும் தெருக்களில் சிதறும் நிலை உள்ளது.
மேலும் வாகன சக்கரங்களுடன் இணைப்பில் உள்ள இரும்பு ராடுகளும் துண்டான நிலையில் உள்ளது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு வாகனத்தை தடுமாற்றத்துடன் பணியாளர்கள் தள்ளி செல்கின்றனர்.
எனவே நகரின் சுகாதாரம் பாதுகாக்க குப்பை வண்டிகளை முறையாக பழுது நீக்கி பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.